உலகம்

சந்திரனின் தென்துருவத்தில் 400 கோடி ஆண்டுகள் பழமையான ‘ஆஸ்ட்ரேல் படுகை’ : அகமதாபாத் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சந்திரனின் தென்துருவத்தில் மறைந்த விண்கல் மோதல் படுகையை அகமதாபாத் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வக விஞ்ஞானிகள், சந்திராயன் 1 விண்கலம் சேகரித்த தரவுகள் மூலம் விண்வெளியில் கண்களுக்கு புலப்படாமல் 400 கோடி ஆண்டுகளாக மறைந்த நிலையில் இருந்த ‘ஆஸ்ட்ரேல் படுகை’ எனப்படும் சந்திர விண்கல் மோதல் படுக்கையை முதன்முதலாக கனிமவியல் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.

சந்திராயன் 1

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சந்திரனை சுற்றி (lunar mission) வரும் ‘சந்திராயன் 1’ என்ற விண்கலத்தை வெற்றிகரமாக ஏவி சோதனை செய்தது.

இந்த விண்கலம் நாசா உள்ளிட்ட சர்வதேச விண்வெளி நிறுவனங்கள் வழங்கிய 6 அறிவியல் கருவிகளை (Payload) சேர்த்து, மொத்தம் 11 அறிவியல் கருவிகளுடன் தரவுகளை சேகரிக்க விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் சந்திரனின் மேற்பரப்பில் நீர் மற்றும் ஹட்ராக்சில் மூலக்கூறுகள் இருந்தது கண்டறியப்பட்டது.

சந்திராயன் 3

இதையடுத்து ஏவப்பட்ட ‘சந்திராயன் 3’ திட்டத்தின் மூலம், சிவ சக்தி முனை என அழைக்கப்படும் தளத்தில் அதிகளவிலான மெக்னீசியம் இருப்பது கண்டறியப்பட்டது.

சந்திரனில் ஏறத்தாழ 300 விண்கல் மோதல் பள்ளங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இதுவரையில் 74 விண்கல் மோதல் பள்ளங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.

ஆஸ்ட்ரேல் படுகை

இந்த நிலையில் சந்திராயன் 1 சேகரித்த கனிமவியல் தரவுகளை பயன்படுத்தி, ‘ஆஸ்ட்ரேல் படுகை’ எனப்படும் கண்களுக்கு புலப்படாமல் மறைந்த நிலையில் இருந்த சந்திர விண்கல் மோதல் படுக்கையின் இருப்பை அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வக விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்த ஆஸ்ட்ரோல் படுகையின் விளிம்புகளில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவதால், இது விண்வெளியில் பயன்படுத்தப்படும் தொலைநோக்கிகளால் கண்டறியப்படாமல் இருந்தது.

400 கோடி ஆண்டுகள் பழமை

சந்திரனின் தென்கிழக்கு அரைக்கோளத்தில் ஆஸ்ட்ரோல் படுகை காணப்படுகிறது. இந்த படுகையானது இதுவரையில் அறியப்பட்டதில் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான மிகப்பழமையான ‘தென் துருவ ஐட்கன் படுகையை’ விட முந்தையதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மேலும் இதுவரை கண்டறியப்பட்ட மென்மையான மற்றும் பரந்த இறுகிய எரிமலை பாறை மேற்பரப்புகளை கொண்ட மற்ற படுகைகளை போலல்லாமல், இது வட்ட வடிவத்தில் அமைந்த 248 சிறிய பசால்ட் குளங்களை கொண்ட இரு இடத்தில் காணப்படுகிறது.

சந்திரனின் மேற்பரப்பில் கனிமவியல் வரைபடத்தை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டதும், 405 முதல் 3000 நானோமீட்டர்களுக்கு இடையில் இயங்குவதுமான நாசாவின் பிம்ப நிறமாலைமானி தரவுகளை கண்டறிய பயன்படுத்தப்பட்டது.

விஞ்ஞானிகள் ஆய்வு

இந்த ஆய்வில், நிலவின் முக்கிய கனிமங்களான பைராக்சீன்கள், ஆலிவின் மற்றும் பிளாஜியோகிளேஸ் ஆகியவற்றால் வெளிப்படுத்தப்படும் உட்கிரகிப்புப் பட்டைகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

இவை, நிலப்பரப்பு எந்த பயனுள்ள சமிக்ஞையையும் அளிக்காத இடங்களில் உள்ள கலவையை அடையாளம் காட்டுகின்றன.

கால்சியம் தாதுக்கள் அதிகமாக உள்ள பெரும்பாலான சந்திர பசால்ட்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த படுகையில் உள்ள பசால்ட்டுகளில், கால்சியம் ஒப்பீட்டளவில் குறைவாகவும், மெக்னீசியம் அதிகமாகவும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT