உலகம்

பண்டைய சீனாவில் கால்நடைகளை திருடினால் கொடூர தண்டனை - அதிர்ச்சி தந்த 600 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு!

மூக்கு அறுக்கப்பட்ட பெண் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்துள்ளார்.

பண்டைய சீனாவில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மிகக் கொடூரமான உடலமைப்பைச் சிதைக்கும் தண்டனைக்கான முதல் நேரடி வரலாற்று ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது.

கால்நடைகளைத் திருடும் குற்றவாளிகளின் மூக்கை முற்றிலும் அறுத்து எறியும் இந்தத் தண்டனை குறித்து வரலாற்றுப் புத்தகங்களில் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், தற்போது முதன்முறையாக அது ஒரு மனித எலும்புக்கூடு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

600 ஆண்டுகள் பழமையான பெண் எலும்புக்கூடு

அமெரிக்கா மற்றும் சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, சீனாவின் பண்டைய காலத்து எலும்புக்கூடுகளை ஆய்வு செய்யும் போது ஒரு பெண்ணின் மண்டையோட்டைக் கண்டறிந்தனர்.

கார்பன் டேட்டிங் சோதனையில், அந்தப் பெண் கி.பி. 1298 முதல் 1404 ஆம் ஆண்டிற்குள் வாழ்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

அந்தப் பெண்ணின் மண்டையோட்டைத் தீவிரமாக ஆய்வு செய்தபோது, அவரது மூக்குப் பகுதி கூர்மையான ஆயுதத்தால் அடிமட்டத்திலிருந்து மேல்நோக்கி வெட்டி எறியப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இது ஏதேனும் நோயினாலோ அல்லது விபத்தினாலோ ஏற்பட்ட காயம் அல்ல, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தண்டனை என்று டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகப் பேராசிரியர் சியான் வாங் உறுதிப்படுத்தியுள்ளார்.

சீன வரலாற்றின் 'ஐந்து கொடூர தண்டனைகள்'

பண்டைய சீனாவின் ஷியா வம்ச காலத்துச் சட்ட புத்தகங்களில் குற்றவாளிகளைத் தண்டிக்க 'ஐந்து கடுமையான உடல் சிதைப்புத் தண்டனைகள்' விவரிக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்றுதான் 'இடி' (Yi) எனப்படும் மூக்கை அறுக்கும் தண்டனை.

மாடு போன்ற விலைமதிப்பற்ற கால்நடைகளைத் திருடுபவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டு வந்தது. "சின் வம்ச மன்னரின் ஆட்சிக் காலத்தில், வெட்டப்பட்ட மூக்குகள் மலைபோலக் குவிந்து கிடந்தன.

வெட்டப்பட்ட கால்கள் வண்டிகளை நிரப்பின" என்று கி.மு. 81 ஆம் ஆண்டின் வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

தண்டனைக்கு பின்னும் வாழ்ந்த அதிசயம்!

அந்தக் காலத்து மோசமான மருத்துவ வசதிகளையும் மீறி, மூக்கு அறுக்கப்பட்ட அந்தப் பெண் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்துள்ளார்.

அவரது மூக்கு வெட்டப்பட்ட பிறகு, ரத்தப்போக்கை நிறுத்தவும், தொற்று ஏற்படாமல் தடுக்கவும் அன்றைய மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். அவர் தனது 40 முதல் 45 வயது வரை வாழ்ந்து இறந்துள்ளார்.

வடுக்களை மறைப்பதற்காக அவர் ஒருவேளை மரத்தாலோ அல்லது வேறு பொருளாலோ செய்யப்பட்ட செயற்கை மூக்கைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று எலும்புகளின் கூர்மையான மாற்றங்களை வைத்து விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சமூகப் புறக்கணிப்பும் குப்புறப் புதைக்கப்பட்ட உடலும்

அந்தப் பெண் இறந்து பல ஆண்டுகள் ஆன பிறகும், சமூகம் அவரை ஒரு குற்றவாளியாகவே பார்த்துள்ளது. அந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மற்ற எலும்புக்கூடுகள் சாதாரணமாகப் புதைக்கப்பட்டிருந்த நிலையில், இந்தப் பெண்ணின் உடல் மட்டும் முகம் தரையை நோக்கியவாறு குப்புறப் புதைக்கப்பட்டிருந்தது.

உயிரோடு இருந்தபோது அண்டை வீட்டாரால் புறக்கணிக்கப்பட்ட அந்தப் பெண், இறந்த பிறகும் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, ஒரு அவமானத்தின் அடையாளமாகவே புதைக்கப்பட்டுள்ளார் என்பதை இந்த ஆராய்ச்சி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

SCROLL FOR NEXT