உலகம்

கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரானின் கச்சா எண்ணெய் தற்காலிக உரிமத்தை ரத்து செய்தது அமெரிக்கா!

கடல்வழிப் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விளைவித்தால் மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்.

சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஹார்முஸ் நீரிணை கப்பல் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானின் கச்சா எண்ணெய் விற்பனைக்காக வழங்கப்பட்டிருந்த தற்காலிக உரிமத்தை அமெரிக்கா உடனடியாக ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது

ஈரானின் பொருளாதாரப் பாதையை முடக்கும் நோக்கில் இந்த கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கிய வழித்தடமாகத் திகழும் ஹார்முஸ் நீரிணையில், ஒரே நாளில் மூன்று எண்ணெய் வணிகக் கப்பல்கள் மீது அடுத்தடுத்து கொடூரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அடையாளம் தெரியாத ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாக பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, சர்வதேசக் கடல் வழிப் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு அமெரிக்கா இந்த அதிரடி முடிவை மேற்கொண்டுள்ளது.

உரிமம் ரத்து:

ஈரான் தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், கச்சா எண்ணெயை வெளிநாடுகளுக்கு விற்கவும் நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டிருந்த தற்காலிகத் தளர்வுகள் மற்றும் உரிமங்களை அமெரிக்கா தற்போது முழுமையாக முடக்கியுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் ஈரான் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்வதில் பெரும் சிக்கல் ஏற்படும். இது அந்நாட்டின் வருவாயைப் பெருமளவில் பாதிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்கா எச்சரிக்கை:

சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், கடல்வழிப் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விளைவித்தால் மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

உலகச் சந்தையில் ஏற்படும் தாக்கம்:

ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது உலக நாடுகளின் எரிபொருள் தேவையைப் பாதிக்க வாய்ப்புள்ளது.