உலகம்

அமெரிக்கா-ஈரான் இடையே தீவிரமடையும் போர்: 80-க்கும் மேற்பட்ட ரானுவ இலக்குகள் மீது அமெரிக்கா குண்டுமழை!

ஈரானின் பந்தர் அப்பாஸ், சிரிக் மற்றும் கெஷ்ம் தீவு ஆகிய கடலோரப் பகுதிகளில் இந்த வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே தற்காலிகமாக நிலவி வந்த போர்நிறுத்த ஒப்பந்தம் முற்றிலுமாக முறிந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை பகுதியில் சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக, ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.

அமெரிக்காவின் அதிரடி வான்வழித் தாக்குதல்:

அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்கப் படைகள் ஈரானின் '80-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகளை' குறிவைத்து துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

அழிக்கப்பட்ட முக்கிய இலக்குகள்:

* ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள்

* கடற்கரை ரேடார் நிலையங்கள் மற்றும் கட்டளை நெட்வொர்க்குகள்

* கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தளங்கள் மற்றும் ட்ரோன் ஏவுதளங்கள்

* ஈரானிய புரட்சிகர காவல் படையின் 60-க்கும் மேற்பட்ட சிறிய ரக ரோந்துப் படகுகள்.

ஈரானின் பந்தர் அப்பாஸ், சிரிக் மற்றும் கெஷ்ம் தீவு ஆகிய கடலோரப் பகுதிகளில் இந்த வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

எண்ணெய் தடைகள் மீண்டும் அமல்:

ராணுவத் தாக்குதல்களுடன் மட்டுமின்றி, ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்க அமெரிக்கா விதித்திருந்த தற்காலிக விலக்கு தற்போது முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உடனடியாக 3% வரை உயர்ந்துள்ளது.

ஈரானின் பதிலடி:

அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. "அமெரிக்காவின் அத்துமீறலுக்கு மிகக் கொடூரமான பதிலடி கொடுக்கப்படும்" என ஈரானின் ஆயுதப் படைகளின் தலைமைப் பிரிவு எச்சரித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை நோக்கி ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தளமும், குவைத்தில் உள்ள அலி அல் சலேம் விமானப்படைத் தளமும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதனால் குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் அபாய சங்கு ஒலிக்கப்பட்டு, வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் ஈரானின் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டு வருகின்றன.

கடந்த பிப்ரவரி 2026-ல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது.

ஜூன் மாத இறுதியில் ஒரு தற்காலிக உடன்படிக்கை எட்டப்பட்ட நிலையில், தற்போது ஹார்முஸ் நீரிணையில் கத்தார் மற்றும் சவூதி அரேபியாவின் எண்ணெய் கப்பல்களை ஈரான் தாக்கியதாகக் கூறி, அமெரிக்கா மீண்டும் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது.

துருக்கியில் நடைபெற்று வரும் நேட்டோ மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்றுள்ள சூழலில், இந்தத் தாக்குதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.