கடந்த பிப்.28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சேர்ந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
3 தசாப்தங்களுக்கும் மேலாக ஈரானின் உச்சத் தலைவராக இருந்த கமேனியின் மறைவைத் தொடர்ந்து அப்பதவியில் பொறுப்பேற்றார் அவரின் இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி.
இஸ்லாமிய குடியரசின் உச்சத்தலைவராக பொறுப்பேற்று கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது வரை அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. காரணம் 56 வயதான மொஜ்தபா 28 அன்று நடத்தப்பட்ட அதே வான்வழித் தாக்குதலில் பலத்த காயமடைந்தார்.
கடுமையான முகச்சிதைவு, கை மற்றும் கால் உட்பட உடலின் பல இடங்களில் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகின. அப்போதே மொஜ்தபாவும் உயிரிழந்தாரா? என சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் ஈரான் இதற்கு மறுப்பு தெரிவித்தது.
அதனைத்தொடர்ந்து அவரின் பெயரில் அறிக்கைகளும் வெளிவந்தன. இதனால் அவர் சிகிச்சையில் இருப்பதாக நம்பப்படுகிறது.
இச்சூழலில்தான் அயதுல்லா கமேனிக்கு ஜூலை 4 முதல் 9 வரை நடைபெற உள்ள இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் அவர் பங்குபெறுவாரா என கேள்விகள் எழுந்துள்ளன.
தலைநகரான தெஹ்ரானில் தொடங்கவுள்ள இறுதி ஊர்வல நிகழ்ச்சிகள், ரோம், ஈராக்கின் முக்கிய புனித தளங்கள் என தொடர்ந்து, இறுதியாக கமேனியின் சொந்த ஊரான மஷ்ஹத்தில் நிறைவடைகிறது. மஷ்ஹத்தில் கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தனது தந்தை அவரின் முன்னாள் உச்சத்தலைவர் அயதுல்லா ரூஹொல்லா கமேனியின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்றதுபோல, மொஜ்தபா தந்தை என்னும் உறவைத்தாண்டி, முன்னாள் தலைவர் இறுதிச்சடங்குகளில் பங்கேற்பாரா? என கேள்விகள் எழுந்துள்ளன.
போர், துக்கம், நிச்சயமன்ற தன்மைகளுக்கு இடையே தலைமை மாற்றம் அரங்கேறியது, அவர் பொதுவெளியில் அதிகம் தோன்றாததுதான் உலக மக்களின் இந்த ஆர்வத்திற்கு வழிவகுத்துள்ளது.
ஒருவேளை அவர் இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளுக்காக பொதுவெளியில் தோன்றினால், அவரது உடல்நலம், ஈரானின் தலைமைத்துவம் தொடர்பான சந்தேகங்கள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் மொஜ்தபாவின் தோற்றம் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து ஈரானுக்கு இன்னும் வலுசேர்க்கும்வேளையில், எதிரி நாடுகளுக்கு சவாலாக அமையும்.