வடக்கு ஏமனில் செயல்பட்டு வரும் இந்த அடையாளம் தெரியாத குழு, மூன்று வெவ்வேறு ஆயுத வளர்ச்சித் திட்டங்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்றுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள 'ஆந்த்ரோபிக்' நிறுவனம் தயாரித்துள்ள 'கிளாட்' ஏஐ மாதிரியைப் பயன்படுத்தி, ஏமனில் உள்ள ஒரு குழு ஏவுகணை மற்றும் ராக்கெட் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆயுதத் தயாரிப்பில் ஏஐ தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்த தனது புதிய அறிக்கையில் ஆந்த்ரோபிக் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
வடக்கு ஏமனில் செயல்பட்டு வரும் இந்த அடையாளம் தெரியாத குழு, மூன்று வெவ்வேறு ஆயுத வளர்ச்சித் திட்டங்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்றுள்ளது. இதில் வழிகாட்டப்பட்ட ராக்கெட், 2,000 கிலோமீட்டருக்கும் (1,243 மைல்) அதிகமான தூரம் சென்று தாக்கக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் 'R2000' எனப்படும் ஏவுகணைத் தொடர் தயாரிப்பு ஆகியவை அடங்கும்.
பொதுவாக மென்பொருள் பொறியாளர்களால் உருவாக்கப்படும் ஏவுகணைகளுக்கான வழிகாட்டுதல், வழிசெலுத்தல் மற்றும் கட்டுப்பாட்டு மென்பொருள்களை உருவாக்க இக்குழு கிளாட் ஏஐ-ஐப் பயன்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் ஏஐ பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, தங்களது ஆயுதத் தயாரிப்புப் பணிகளைப் பல கணக்குகள் மூலம் பிரித்து, வழக்கமான மென்பொருள் சோதனைகள் போல காட்டி ஏஐ அமைப்பை ஏமாற்ற முயன்றுள்ளனர்.
இக்குழுவினர் ஒரு நேரடி ராக்கெட் சோதனையையும் நடத்தியுள்ளனர். ஆனால் அந்தச் சோதனை தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தோல்விக்கான காரணத்தைக் கண்டறியவும், தவறுகளைச் சரிசெய்யவும் மீண்டும் கிளாட் ஏஐ-இன் உதவியை நாடியுள்ளனர். மேலும், ஏஐ அமைப்பின் நேரடி இணைப்பு இல்லாதபோதும் பணிகளைத் தொடர வசதியாக, ஆஃப்லைன் உருவகப்படுத்துதல் கருவிகளையும் இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்த முறையற்ற பயன்பாட்டைக் கண்டறிந்த உடனடியாக, அக்குழுவுடன் தொடர்புடைய அனைத்து ஏஐ கணக்குகளையும் ஆந்த்ரோபிக் நிறுவனம் தடை செய்துள்ளது. மேலும், இது தொடர்பான புலனாய்வுத் தகவல்களை சர்வதேசப் பாதுகாப்புப் பங்காளிகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளது. எதிர்காலத்தில் ஏஐ அமைப்புகள் ராணுவ நோக்கங்களுக்காகவோ அல்லது ஆயுதத் தயாரிப்பிற்காகவோ தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க கூடுதல் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த ஏஐ உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முழுமையான செயல்பாட்டுக்கு வந்த ஆயுதமாக மாறவில்லை என்று ஆந்த்ரோபிக் உறுதியளித்துள்ளது. செங்கடல் பகுதியில் ஹூதி அமைப்பினரின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், ஏஐ தொழில்நுட்பம் ஆயுதக் குழுக்களின் கைக்குச் செல்வது உலகளாவிய பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.