உலகம்

AI Supply Chain-க்கு சர்வதேச பாதுகாப்பு- இந்தியா உள்பட 10 நாடுகள் கூட்டணி!

அமெரிக்காவின் முன்னெடுப்பில் உருவான இந்த ஒப்பந்தம் உலகளாவிய தொழில்நுட்ப வர்த்தகத்தில் மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறையில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளவும், எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பாகப் பராமரிக்கவும் இந்தியாவும் அமெரிக்காவும் உள்ளிட்ட 10 நாடுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் பொருளாதார விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ஜேக்கப் ஹெல்பர்க் தலைமையில் நடைபெற்ற பாக்ஸ் சிலிக்கா அமைப்பின் நிறுவன நாடுகளின் கூட்டத்தில் இந்த முக்கிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா, கத்தார், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன.

பொருளாதாரப் பாதுகாப்பே நாட்டின் உண்மையான தேசியப் பாதுகாப்பு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்த நாடுகளின் கூட்டுச் செயல்பாடு உறுதியாகியுள்ளது. அமெரிக்காவின் முன்னெடுப்பில் உருவான இந்த ஒப்பந்தம் உலகளாவிய தொழில்நுட்ப வர்த்தகத்தில் மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

விநியோகச் சங்கிலிக்கான கூட்டு முயற்சி

செமி கண்டக்டர் உற்பத்திக்கான சிலிக்கான் மற்றும் இதர மிக முக்கியமான கனிம வளங்களின் விநியோகச் சங்கிலியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 'பாக்ஸ் சிலிக்கா' திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக, அதிநவீன தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவுத் துறையின் உள்கட்டமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பது நாடுகளின் கூட்டுப் பொறுப்பாகும் என்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவின்படி, இந்தத் தொழில்நுட்பத் துறை இப்போது 'சூப்பர் இன்டெலிஜென்ஸ்' என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஐந்தடுக்கு பணிக்குழுக்கள் அமைப்பு

எந்த ஒரு நாடும் தனியாக செயற்கை நுண்ணறிவுத் துறையின் பாதுகாப்பான அடித்தளத்தை உருவாக்க முடியாது என்பதால், அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இதற்காக ஐந்து முக்கிய பணிக்குழுக்களை அமைக்க இந்தச் சந்திப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதுமையான கொள்கை வடிவமைப்பு, முக்கிய துறைகளில் புதிய தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துதல், பாதுகாப்பான விநியோகச் சங்கிலி மையங்களை உருவாக்குதல் மற்றும் தொழில்நுட்பத்தின் நெகிழ்வுத்தன்மையைக் காத்தல் போன்ற பணிகளை இந்தப் பணிக்குழுக்கள் மேற்கொண்டு சர்வதேச அளவில் கூட்டுறவை பலப்படுத்தும்.

SCROLL FOR NEXT