அமெரிக்காவை சேர்ந்த பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ் என்ற 6 வயது யோகா ஆசிரியர் பற்றி தெரியுமா?
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனைச் சேர்ந்தவர் பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ். அவருக்கு வெறும் 6 வயது.
ஆனால் ஓராண்டுக்கு முன்னதாகவே அதாவது, அவரின் 5 வயதில், சரியாக 5 ஆண்டுகள் மற்றும் 337 நாட்களில் அவர் உலக சாதனை ஒன்றை படைத்திருந்தார்.
இந்த வயதில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 200 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சி பாடத்தை (Course) வெற்றிகரமாக முடித்து, இந்த இளம் வயதிலேயே சான்றிதழ் பெற்ற, அதாவது அங்கீகரிக்கப்பட்ட யோகா ஆசிரியரானார். இது உலக சாதனை ஆகும்.
இந்த சாதனையை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்தது.
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் அவரின் பெயர் வெளியீட்டின் போது பேசிய அவர், "நான் புதிய விஷயங்களை முயற்சிப்பதையும், கற்றுக்கொள்ளும்போதே மகிழ்ச்சியாக இருப்பதையும் விரும்புகிறேன்.
உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் தங்களின் வயது என்னவாக இருந்தாலும், தங்களது கனவுகளைப் பின்தொடர தூண்டுகோலாக இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்பு இந்தியாவின் பிரான்வி குப்தா தனது 7 வயதில் படைத்திருந்த சாதனையை, இந்த ஹூஸ்டன் சிறுமி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.