ஐரோப்பிய மண்ணிலிருந்து முதல்முறையாக ஸ்பெக்ட்ரம் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனைப் படைத்துள்ளது ஜெர்மனியைச் சேர்ந்த ஐசர் ஏரோஸ்பேஸ் நிறுவனம்.
நார்வேயின் ஆர்டிக் பகுதியில் உள்ள ஆண்டோயா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்த 28 மீட்டர் உயரமும், 2 மீட்டர் விட்டமும் கொண்ட ஸ்பெக்ட்ரம் ராக்கெட் நேற்று விண்ணில் ஏவப்பட்டது.
இது ஸ்பெக்ரம் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஐசர் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இரண்டாவது முயற்சியாகும். 18 மாதங்களுக்கு முன்பு ஏவப்பட்ட முதல் சோதனை முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஸ்பெக்ட்ரம் ராக்கெட் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சுமைகளைச் சுமந்து செல்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புவியின் குறைந்த சுற்றுப்பாதைக்கு சுமார் 1,000 கிலோகிராம் எடையையும், சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதைக்கு சுமார் 700 கிலோகிராம் எடையையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
இந்த மனிதரில்லா ஸ்பெக்ட்ரம் ராக்கெட், 5 சிறிய செயற்கைக்கோள்களையும் ஒரு தொழில்நுட்ப பரிசோதனை கருவியையும் வெற்றிகரமாக விண்வெளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களுக்கு மாற்றாக, ஐரோப்பாவே சொந்தமாகக் கோள்களை ஏவுவதற்கான தன்னாட்சியைப் பெற இந்த வெற்றி ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.