உலகம்

ChatGPT-ஐ 'சார்' என்று அழைத்து தொழில் திட்டம் தயாரித்த 77 வயது முதியவர்: இணையத்தில் வைரலாகும் பதிவு!

இந்த அழகிய நிகழ்வை அந்தத் தொழில்நுட்ப வல்லுநர் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

தொழில்நுட்ப வல்லுநரை வியப்பில் ஆழ்த்தியது அந்த முதியவரின் தொழில் திட்டம் மட்டுமல்ல, அவர் செயற்கை நுண்ணறிவிடம் உரையாடிய விதமும்தான்.

விமானப் பயணத்தின் போது 77 வயது முதியவர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு சாட்டான ChatGPT-ஐ மிகவும் மரியாதையுடன் 'சார்' என்று அழைத்து, புதிய தொழில் திட்டத்தை உருவாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமீபத்தில் விமானத்தில் பயணித்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தனக்கு அருகில் அமர்ந்திருந்த 77 வயது முதியவரைக் கவனித்துள்ளார். அந்த முதியவர் தனது செல்போனில் தீவிரமாக ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருந்தார். அவர் 'செங்குத்து விவசாயம்' தொடர்பான புதிய தொழில் திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக ChatGPT-உடன் உரையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

ஏஐ-க்கு வழங்கிய 'சார்' மரியாதை

தொழில்நுட்ப வல்லுநரை வியப்பில் ஆழ்த்தியது அந்த முதியவரின் தொழில் திட்டம் மட்டுமல்ல, அவர் செயற்கை நுண்ணறிவிடம் உரையாடிய விதமும்தான். வழக்கமான கட்டளைகளைப் போலப் பேசாமல், ChatGPT அளித்த பதில்களுக்கு, "மிகவும் அருமையான வழிகாட்டுதல் சார்... மிக்க நன்றி, மீண்டும் உங்களைத் தொடர்புகொள்கிறேன் சார்..." என்று மனிதர்களிடம் பேசுவது போன்று மிகவும் மரியாதையுடன் 'சார்' எனக் குறிப்பிட்டு உரையாடியுள்ளார்.

நண்பர்களாக மாறிய பயணிகள்

இந்த அழகிய நிகழ்வை அந்தத் தொழில்நுட்ப வல்லுநர் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார். விமானம் புறப்படுவது முதல் தரையிறங்கும் வரை இருவரும் தொழில் மற்றும் தொழில்நுட்பம் குறித்துத் தொடர்ச்சியாக பேசியதாகவும், பயணத்தின் முடிவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுக்கள்

இந்தப்பதிவு வைரலானதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பார்வையாளர்களையும் ஆயிரக்கணக்கான விருப்பங்களையும் பெற்று வருகிறது. 77 வயதிலும் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் பலருக்கும் ஊக்கமளிப்பதாகப் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் ஏஐ மனிதர்களைத் தாக்கினால் கூட, இவரின் நற்பண்புக்காக இவரை மட்டும் எதுவும் செய்யாமல் விட்டுவிடும் எனச் சிலர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளனர். மனிதராக இருந்தாலும் ஏஐ சாட்டாக இருந்தாலும் தனது பழைய காலத்து மரியாதையைக் கைவிடாத முதியவரின் நற்பண்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

SCROLL FOR NEXT