எனக்கு பசிக்கும்ல...ஆஸ்பென் உழவர் சந்தையில் ரொட்டித் துண்டை ருசித்த கரடி!

பொதுமக்கள் பலர் கரடியை மிக அருகில் இருந்து தங்கள் மொபைல் போன்களில் வீடியோ எடுக்கத் தொடங்கினர்.
bear
Published on: 
Summary

கொலராடோ பகுதியில் தற்போது நிலவும் கடுமையான வறட்சி காரணமாகக் காடுகளில் கரடிகளுக்குத் தேவையான இயற்கை உணவுகள் பெருமளவில் குறைந்துள்ளன.

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அஸ்பென் நகரில், பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த உழவர் சந்தைக்குள் திடீரென புகுந்த கரடி ஒன்று அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரொட்டியை எடுத்துச் சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 26 சனிக்கிழமை அன்று அஸ்பென் உழவர் சந்தையில் ஏராளமான மக்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த கருப்புக் கரடி ஒன்று அமைதியாகச் சந்தைக்குள் நுழைந்தது. அங்கு செயல்பட்டு வந்த 'லூயிஸ் ஸ்விஸ் பேக்கரி' கடைக்குச் சென்ற அந்தக் கரடி, மேஜையில் வைக்கப்பட்டிருந்த சுடச்சுட புதிய ரொட்டித் துண்டை எடுத்து நிதானமாகச் சாப்பிடத் தொடங்கியது.

வைரல் வீடியோ

பொதுமக்கள் பலர் கரடியை மிக அருகில் இருந்து தங்கள் மொபைல் போன்களில் வீடியோ எடுக்கத் தொடங்கினர். கரடி மக்களைப் பற்றிப் பொருட்படுத்தாமல் தனது உணவை மட்டுமே கவனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

உணவுத் தேடலுக்கு காரணம் என்ன?

கொலராடோ பகுதியில் தற்போது நிலவும் கடுமையான வறட்சி காரணமாகக் காடுகளில் கரடிகளுக்குத் தேவையான இயற்கை உணவுகள் பெருமளவில் குறைந்துள்ளன. மேலும், வரவிருக்கும் குளிர்கால உறக்க நிலைக்கு ஆயத்தமாகும் பொருட்டு, கரடிகள் அதிகப்படியான உணவை உட்கொள்ளும் 'ஹைப்பர்பேகியா' என்ற காலகட்டத்தில் தற்போது உள்ளன. இதனாலேயே அவை உணவைத் தேடி மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் படையெடுக்கின்றன.

வனத்துறை எச்சரிக்கை

வனவிலங்கு பாதுகாப்புத் துறையினர் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது போன்ற சூழல்களில் கரடிகளின் அருகில் சென்று வீடியோ எடுப்பதையோ அல்லது அவற்றுக்கு இடையூறு விளைவிப்பதையோ தவிர்க்க வேண்டும் என்றும், மனிதர்கள் பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com