400 people killed in Pakistan strike on Afghanistan  
உலகம்

Pak-Afgan conflict | பாகிஸ்தான் நடத்திய கொடூரத் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 400 பேர் உயிரிழப்பு

மாலை மலர்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று பாகிஸ்தான் திடீர் தாக்குதல் நடத்தியதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லைப் பகுதிகளில் கடந்த சில காலமாகவே மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

எல்லையில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் கூறினாலும் இதில் அப்பாவி பொதுமக்கள் தான் உயிரிழப்பதாக ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு குற்றம்சாட்டி வருகிறது.

அந்த வகையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று பாகிஸ்தான் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூரத் தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில் தலைநகர் காபுலில் உள்ள 2000 படுக்கை வசதி கொண்ட ஓமித் மறுவாழ்வு மருத்துவமனை கடுமையாக சேதம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இத்தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் என தாலிபான் அரசு குற்றச்சாட்டும் நிலையில், தீவிரவாத செயல்பாடுகள் நடக்கும் இடங்களையே தாக்கியதாகவும் மருத்துவமனைகளை தாக்கவில்லை எனவும் பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஏற்கனவே மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் மூண்டுள்ள நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை மோதல்கள் தீவிரமடைந்து வருகிறது.