உலகம்

10,000 ரோஹிங்கியா மக்கள் கொலை.. மியான்மர் ராணுவம் செய்தது 'இனப்படுகொலை' என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

முகாம்களில் மட்டும் சுமார் 12 லட்சம் ரோஹிங்கியாக்கள் அடைக்கலமாகியுள்ளனர்.

2017 இல் ரோஹிங்கியா மக்கள் மீது மியான்மர் ராணுவம் நிகழ்த்திய வன்முறை, 'இனப்படுகொலை' என ஐநா சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரோஹிங்கியாக்கள் என்பவர்கள் மியான்மரின் ராகினே மாநிலத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சிறுபான்மையினர் ஆவர்.

சொந்த நாட்டிலேயே அகதி

மியான்மர் அரசு இவர்களைத் தனது நாட்டின் அதிகாரப்பூர்வ பழங்குடி இனமாக ஏற்பதில்லை. மாறாக, வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்றே கூறி வருகிறது.

கடந்த 1982ம் ஆண்டு மியான்மர் அரசு கொண்டு வந்த சட்டத்தின் மூலம் இவர்களின் குடியுரிமை முழுமையாகப் பறிக்கப்பட்டது.

2017இல் நடந்தது என்ன?

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மியான்மரின் வடக்கு ரகைன் மாநிலத்தில் அரக்கான் ரோஹிங்கியா சால்வேஷன் ஆர்மி என்ற ஆயுதக் குழு காவல் நிலையங்களை தாக்கியது.

இதைத்தொடர்ந்து மியான்மர் ராணுவம் ஆயுதக் குழுனரை ஒடுக்குவதற்காக கூறி அப்பாவி ரோஹிங்கியா மக்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தியது.

கொடுங்கோன்மை

சுமார் 10,000 ரோஹிங்கியர்கள் கொல்லப்பட்டதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அட்டூழியங்கள் இழைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காகவே இந்த நடவடிக்கை என்று மியான்மர் அரசாங்கம் உலகிற்குத் தெரிவித்தது.

இருப்பினும், அதைத் தொடர்ந்த புலனாய்வு அறிக்கைகள், ராணுவம் பொதுமக்களைப் படுகொலை செய்ததையும், பெண்களைத் துன்புறுத்தியதையும், முழு கிராமங்களையும் எரித்ததையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.

இதனால், 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, தங்கள் வீடுகளையும் கிராமங்களையும் விட்டு அண்டை நாடான வங்கதேசத்திற்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ரோஹிங்கியர்கள்

வழக்கு

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியா, 2017 இல் மியான்மர் ராணுவம் ரோஹிங்கியா மக்கள் மீது நிகழ்த்திய அட்டூழியங்களுக்கு எதிராக 2019 நவம்பரில் நெதர்லாந்து தலைநகர் தி ஹேக்கில் உள்ள ஐநா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

1948 ஆம் ஆண்டின் இனப்படுகொலையை தடுப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையை மியான்மர் மீறிவிட்டதாகவும், ரோஹிங்கியாக்களை முற்றிலுமாக ஒழிக்க ராணுவம் முயன்றதாகவும் காம்பியா நீதிமன்றத்தில் வாதிட்டது.

இருப்பினும், ஆயுதக் குழுக்களை எதிர்கொள்வதற்கான ஒரு பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமே அது என்று மியான்மர் நியாயப்படுத்தியது.

இறுதித் தீர்ப்பு

இந்த வழக்கு விசாரணை நீண்டகாலமாக தொடர்ந்த நிலையில் பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு இன்று இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பை 15 நீதிபதிகள் அடங்கிய ஐநா சர்வதேச நீதிமன்றம் அமர்வு இன்று வாசித்தது.

அதில், ரொஹிங்கியாக்களுக்கு எதிராக மியான்மர் ராணுவம் செய்தது இனப்படுகொலை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, இன்று நீதிமன்றம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

15 நீதிபதிகள் அடங்கிய ஐநா சர்வதேச நீதிமன்றம் அமர்வு

இனப்படுகொலை

மியான்மர் ராணுவம் ஒரு முழு இனத்தையே ஒழிக்க முயன்றதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மியான்மர் ராணுவத்தினர் 10,000க்கும் அதிகமான ரோஹிங்கியா மக்களை கொன்றதற்கான ஆதாரம் ஆதாரங்கள் உள்ளன.

பெண்கள் மீது பாலியல் வன்முறைகள், குழந்தைகள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

மியான்மரின் அரச வன்முறைக்கு அஞ்சி, தற்போது அண்டை நாடான வங்கதேசத்தின் தற்காலிக முகாம்களில் மட்டும் சுமார் 12 லட்சம் ரோஹிங்கியாக்கள் அடைக்கலமாகியுள்ளனர். இந்திய அரசின் மதிப்பீட்டின்படி, சுமார் 40,000 ரோஹிங்கியாக்கள் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.

மியான்மர் அரசுக்கு உத்தரவு

இந்நிலையில் இந்த இனப்படுகொலைக்கு மியான்மர் அரசு பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு மியான்மர் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற அட்டூழியங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் மியான்மர் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த இறுதி தீர்ப்பை மியான்மர் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் கூறியது.

ரோஹிங்கியா அகதிகள்

நிம்மதி?

இந்தத் தீர்ப்பு, பல ஆண்டுகளாக வங்கதேசத்தின் அகதிகள் முகாம்களில் வசித்து வரும் லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்களுக்கு பெரும் நிம்மதியையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.

அவர்கள் எதிர்கொள்ளும் அநீதிக்கு தீர்வு காணவும், தங்கள் தாய்நாட்டிற்கு பாதுகாப்பாக திரும்பவும் காத்திருக்கும் அவர்களுக்கு இந்த தீர்ப்பு உத்வேகத்தை அளிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

ஆனால் சர்வாதிகார போக்குடைய மியான்மர் இந்த தீர்ப்பை பின்பற்றுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

காசா

காசா இனப்படுகொலை

மறுபுறம் சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தாக்கல் செய்துள்ள காசா இனப்படுகொலை வழக்கில் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய முன்னுதாரணமாகவும் அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களுக்கு பதிலடியாக இது ஒரு 'தற்காப்பு' நடவடிக்கை மட்டுமே என்ற மியான்மரின் வாதத்தை நீதிமன்றம் நிராகரிததை போல இதேபோன்ற நியாயங்களை முன்வைத்த இஸ்ரேலின் வாதமும் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT