

மியான்மரில் கடலில் 2 படகுகள் மாயமானதில் 500க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஐநா தகவல்படி, கடந்த ஜூன் மாத இறுதியில் மியான்மரின் மேற்கு ராகினே மாநிலத்திலிருந்து இரண்டு படகுகள் அகதிகளுடன் புறப்பட்டுள்ளன.
சுமார் 250 பயணிகளுடன் புறப்பட்ட முதல் படகு படகு, புறப்பட்ட சில நாட்களிலேயே கடலில் தொடர்பை இழந்து மாயமானது.
சுமார் 280 அகதிகளுடன் சென்ற இரண்டாவது படகு, கடந்த ஜூலை 8 அன்று மியான்மரின் ஆயேயர்வாடி கடற்கரைக்கு அருகே நடுக்கடலில் மூழ்கியதாக நம்பப்படுகிறது.
மியான்மரின் ராகினே மாநிலத்தில் நிலவி வரும் வன்முறைகளிலிருந்து தப்பித்து வேறு புகலிடம் தேடிச் சென்றவர்கள் இவர்கள்.
அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என ஐநா அகதிகள் முகமை மற்றும் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் அச்சம் தெரிவித்துள்ளன.
ரோஹிங்கியாக்கள் என்பவர்கள் மியான்மரின் ராகினே மாநிலத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சிறுபான்மையினர் ஆவர்.
மியான்மர் அரசு இவர்களைத் தனது நாட்டின் அதிகாரப்பூர்வ பழங்குடி இனமாக ஏற்பதில்லை. மாறாக, வங்காளதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்றே கூறி வருகிறது.
கடந்த 1982ம் ஆண்டு மியான்மர் அரசு கொண்டு வந்த சட்டத்தின் மூலம் இவர்களின் குடியுரிமை முழுமையாகப் பறிக்கப்பட்டது.
இதனால் அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, திருமணம் மற்றும் சுதந்திரமாகப் பயணிக்கும் உரிமைகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
மியான்மரின் அரச வன்முறைக்கு அஞ்சி, தற்போது அண்டை நாடான வங்கதேசத்தின் தற்காலிக முகாம்களில் மட்டும் சுமார் 12 லட்சம் ரோஹிங்கியாக்கள் அடைக்கலமாகியுள்ளனர்.
ஐநா அகதிகள் முகமையின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, கடந்த 2025 டிசம்பர் 31 நிலவரப்படி இந்தியாவில் சுமார் 22,700 ரோஹிங்கியா அகதிகள் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், இந்திய அரசின் மதிப்பீட்டின்படி, ஐநாவிடம் பதிவு செய்யாதவர்களையும் சேர்த்து சுமார் 40,000 ரோஹிங்கியாக்கள் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் ரோஹிங்கியாக்களுக்கென அதிகாரப்பூர்வ அகதிகள் முகாம்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும், சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்களைக் கண்டறிந்து நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முகாம்களில் சர்வதேச மனிதாபிமான உதவிகள் குறைந்துவிட்டதாலும், போதிய வாழ்வாதாரம் இல்லாததாலும், அவர்கள் மலேசியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு மரப் படகுகள் மூலம் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
ஐநா தரவுகளின்படி, கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாப் பகுதியில் சுமார் 900 ரோஹிங்கியா அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் அல்லது மாயமாகியுள்ளனர்.
2025ல் மட்டும் 6,500க்கும் மேற்பட்டோர் இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.