புதுடெல்லி:
வீடு தேடி பெட்ரோல் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. இந்த திட்டம் பெங்களூரில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. மை பெட்ரோல் பம்ப் என்ற இணையதளம் மூலம் பெட்ரோல் டீசல் விற்பனை தொடங்கப்பட்டது. இதில் உள்ள வரவேற்பைப் பொருத்து நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் தொடக்க விழாவில் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு பேசியதாவது:-
தொலைத் தொடர்புத்துறையில் ஏற்பட்டுள்ள புரட்சியானது, அனைத்து துறைகளிலும் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சரியான கொள்கைகளுடன் செயல்படும் சுதந்திர சந்தை, எப்போதும் நுகர்வோர் நலன்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பயன்படுத்தி, விரைவில் ஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனையை தொடங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.