திருப்பதி:
திருப்பதிக்கு நடைபாதை வழியாக வரும் பக்தர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு வழங்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்து கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் இலவசமாக ஒரு லட்டு வழங்கி வந்தது.
கடந்த 2 வருடங்களாக நடைபாதை வழியாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் கூடியது. விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் சராசரியாக 25 ஆயிரம் பேர் நடைபாதை வழியாக வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் இலவசமாக ஒரு லட்டு வழங்கப்பட்டது.
அப்போதே தேவஸ்தான நிர்வாகம் இலவச லட்டு திட்டத்தை நிறுத்தி விடலாம் என முடிவு செய்தது. ஆனால், பக்தர்களிடம் கடும் எதிர்ப்பு ஏற்படும் என்பதால் அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு கோடை விடுமுறை முதல் திருப்பதிக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. நடைபாதை வழியாக சாதாரண நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் நடைபாதையாக வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
இதனால், 45 ஆயிரம் லட்டுகள் வரை இலவசமாக வழங்க வேண்டி இருந்தது. இந்த திட்டத்தால் வார விடுமுறை நாட்களில் தேவஸ்தானத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கும் இலவச லட்டுகளை நிறுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
முதல் முறையாக இந்த நடைமுறை வரும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுத்தப்படும். பின்னர் படிப்படியாக மற்ற நாட்களிலும் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.