செய்திகள்

தமிழகத்தில் 10-ந் தேதி வியாபாரிகள் போராட்டம்: விக்கிரமராஜா பேட்டி

ஜி.எஸ்.டி. வரியை குறைக்காவிட்டால் 10-ந் தேதி தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று விக்கிரமராஜா கூறினார்.

மாலை மலர்

கும்பகோணம்:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் பாத்திர வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவிலே கோ‌ஷங்கள் எழுந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக பாத்திரத்திற்கு மூலப்பொருட்களுக்கு 18 சத வீதம் வரிகட்டப்படுகிறது. அதன்பிறகு அதை பாத்திரமாக உருவாக்கிய பிறகு 12 சதவீதம் வரி கட்டப்படுகிறது. எனவே அலுமினிய பாத்திரங்களுக்கு வரிவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கையோடும் 18 சதவீதத்தை 5 சதவீதமாக மாற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அமைச்சரை 3-ந் தேதி சந்திக்க இருக்கிறோம். கட்டிடத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஓட்டு மொத்தமாக கட்டிட தொழில் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.வரி முழுமையாக குறைக்கப்பட வேண்டும்.

குஜராத்தில் தேர்தலுக்கு முன்பு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டது. இதன் காரணமாக வியாபாரிகள் அளித்த வாக்குகளால் தான் பா.ஜனதா வெற்றி பெற்றது.

வியாபாரிகளின் ஓட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் எங்களது நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் நிறைவேற்றி தரவேண்டும். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனை நினைவில் கொள்ள வேண்டும்.

டெல்லியில் 8-ந் தேதி நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி குறைப்பு செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் எங்களுடைய ஆட்சி மன்ற குழு கூட்டப்பட்டு 10-ந் தேதி தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

அதன்பிறகும் எங்களது கோரிக்கை ஏற்கப்பட வில்லை என்றால் அனைத்து சங்க ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைகளை பெற்று அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.