உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
அது ராமர் பிறந்த இடம் என்பதால் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத், பா.ஜனதா தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 21 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் அத்வானி உள்பட 21 பேரையும் 2001-ம் ஆண்டு ரேபரேலி கோர்ட்டு விடுவித்தது.
இதை எதிர்த்து சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதில் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீதான வழக்கை மறு விசாரணை செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.
மேலும் குற்றச்சாட்டை பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டது. அனைவரும் மே 30-ந்தேதி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய மந்திரி உமாபாரதி, வினய் கத்தியார் எம்.பி. ஆகியோர் லக்னோ சென்றனர்.
அவர்களை மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்றார். பின்னர் அத்வானி உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு அவர்கள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.
இந்த நிலையில் முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று காலை திடீரென்று அயோத்திக்கு புறப்பட்டு சென்றார்.
அவர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அயோத்திக்கு சென்றார். அங்கு அனுமன் கர்னி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். யோகி ஆதித்யநாத் திடீர் அயோத்தி பயணத்தால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.