முருகன் - அர்ச்சுணன் 
செய்திகள்

சிவகாசியில் 2 தொழிலாளர்கள் கொலை - போலீசார் விசாரணை

சிவகாசியில் 2 தொழிலாளர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அண்ணா நகரை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் அர்ச்சுணன் (வயது 32), பள்ளப்பட்டி விவேகானந்தர் காலனியைச் சேர்ந்த சஞ்சீவி மகன் முருகன் (33). நண்பர்களான இவர்கள் இருவரும் சுமை தூக்கும் தொழிலாளிகள். தினமும் அதிகாலையிலேயே வீட்டில் இருந்து புறப்பட்டு வேலைக்கு சென்றுவிடுவார்கள்.

இன்று வழக்கம்போல் இருவரும் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு கிளம்பினர். இந்த நிலையில் காரனேசன் காலனி பகுதியில் அர்ச்சுணன் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடப்பதை அந்த பகுதியினர் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதேபோல் அருகில் உள்ள நேரு காலனியில் முருகன் பிணமாக கிடந்துள்ளார். அவரது உடலிலும் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்பட்டன. ஒரே நேரத்தில் நண்பர்களான 2 தொழிலாளர்கள் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தது சிவகாசியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அர்ச்சுணன், முருகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே நேரு காலனி, கிழக்கு போலீஸ் கட்டுப்பாட்டு பகுதி என்பதால் அவர்களும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.