தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, வேளாண் துறை அமைச்சர் வினோத் உரையாற்றினார்.
வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதே முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதன்மை நோக்கம் எனக் குறிப்பிட்டு, அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
"நாட்டின் வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்தத் துறையும் சரியான பாதையில் செல்ல முடியாது" என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், பழைய திட்டங்களுடன் விவசாயிகளுக்கான சில புதிய திட்டங்களும் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.
வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பிரதமர் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 14 தொகுப்புகளுக்கு மாநில அரசின் நிதியாக ரூ.648 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மண்வளப் பாதுகாப்புக்கான ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத் திட்டக் கட்டணத் தொகையாக மின்சார வாரியத்திற்கு ரூ.7,432.58 கோடி வழங்கப்படும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ரூ.132 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன.