தலைப்புச்செய்திகள்

நேபாள பெருவெள்ளம்: 103 தமிழர்களை மீட்கத் தீவிர நடவடிக்கை- அமைச்சர் ராஜ்மோகன்

வெள்ளத்தில் சிக்கிய ஒரு பேருந்தில் இருந்த 20 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாள பெருவெள்ளம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் சட்டசபையில் ஆற்றிய விளக்க உரை-

நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த பேரிடரில் 35 பாலங்கள் மற்றும் 45 தொங்கு பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கைலாஷ் மானசரோவர் ஆன்மீக பயணம் மேற்கொண்டு நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழர்களையும் போர்க்கால அடிப்படையில் மீட்கத் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வெள்ள பாதிப்பு நிலவரம்

கும்பகோணம் ‘சூப்பர் யாத்ரா’ நிறுவனம் மூலம் புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 54 பேர் என மொத்தம் 57 பேர் ஆன்மீகச் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த 3 பேருந்துகளில், நடுவில் சென்ற பேருந்து திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியது. அதேபோல, சென்னையின் ‘மகாதேவ் கைலாஷ் யாத்ரா’ நிறுவனம் மூலமாக 49 தமிழர்கள் நேபாளத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்குள்ள பல்வேறு இடங்களில் சிக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமிழர்களை மீட்க டெல்லி தமிழ்நாடு இல்ல அதிகாரிகளும், இந்திய வெளியுறவு அமைச்சகமும் நேபாள அரசுடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார். வெள்ளத்தில் சிக்கிய ஒரு பேருந்தில் இருந்த 20 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்கள் வேறு மாற்றுப் பாதை வழியாகத் தலைநகர் காத்மாண்டுவிற்கு அழைத்து வரப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புகொள்ளத் தொடர் முயற்சிகள்

மேலும், மகாதேவ் கைலாஷ் யாத்ரா மூலம் சென்ற 49 பேரின் தற்போதைய நிலையை அறியத் தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் உள்ளூர் பேரிடர் மீட்புக் குழுக்கள் மூலம் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாக அனைவரையும் பாதுகாப்பாகத் தமிழ்நாடு அழைத்து வரத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.