தலைப்புச்செய்திகள்

ஆப்பிளின் புதிய iOS 27 அதிகாரப்பூர்வமாக வெளியீடு: ஐபோன் பயனர்களுக்கு காத்திருக்கும் அசத்தல் அம்சங்கள்!

iOS 27 அப்டேட்டின் மிக முக்கியமான அம்சமாக மாற்றியமைக்கப்பட்ட புதிய சீரி செயலி பார்க்கப்படுகிறது.

ஐபோனின் விஷுவல் இண்டலிஜென்ஸ் அம்சம் இந்த அப்டேட்டில் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் பயனர்களுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய இயங்குதளமான iOS 27-ஐ உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. உலகளாவிய தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, பல கட்டச் சோதனைகளுக்கு பிறகு இந்த அப்டேட் தற்போது பயனர்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப்பம் மற்றும் புதிய வடிவமைப்பு மாற்றங்களுடன் வெளிவந்துள்ள இந்த இயங்குதளம், ஐபோன் பயன்பாட்டு அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

புதிய சீரி ஏஐ

iOS 27 அப்டேட்டின் மிக முக்கியமான அம்சமாக மாற்றியமைக்கப்பட்ட புதிய சீரி செயலி பார்க்கப்படுகிறது. ஆப்பிளின் சொந்த ஏஐ மாடல்கள் மற்றும் கூகுளின் 'ஜெமினி' மாடல்களின் கூட்டுத் தொழில்நுட்பத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. பயனரின் தனிப்பட்ட சூழலைப் புரிந்து கொண்டு செயலிகளுக்கு இடையே தகவல்களைத் திரட்டுதல், கோப்புகளை மாற்றி அமைத்தல் மற்றும் சிக்கலான கேள்விகளுக்கு உடனடிப் பதிலளித்தல் போன்ற பணிகளை இந்த புதிய சீரி மிக எளிதாக செய்கிறது.

விஷுவல் இண்டலிஜென்ஸ்

ஐபோனின் விஷுவல் இண்டலிஜென்ஸ் அம்சம் இந்த அப்டேட்டில் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கேமரா செயலி மூலம் பொருட்களை நேரடியாகப் பார்த்து அவற்றை அடையாளம் காண்பது, அது தொடர்பான கேள்விகளை சீரியிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது மற்றும் உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுப்பது சாத்தியமாகியுள்ளது. அதுமட்டுமன்றி, ஐபோன் திரையில் தெரியும் தகவல்களையும் படித்து புரிந்துகொண்டு பயனருக்கு உதவக்கூடிய திறன் இதன் சிறப்பு அம்சமாகும்.

லிக்விட் கிளாஸ் வடிவமைப்பு

முந்தைய பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட 'லிக்விட் கிளாஸ்' இடைமுக வடிவமைப்பு தற்போது கூடுதல் மாற்றங்களைப் பெற்றுள்ளது. திரையில் உள்ள ஐகான்கள் மற்றும் கட்டுப்பாடுகளின் ஒளிபுகும் தன்மையை பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளக்கூடிய புதிய ஸ்லைடர் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதனுடன் முகப்புத் திரையில் வைக்கப்படும் விட்ஜெட்களின் அளவை மிக பெரியதாக மாற்றும் வசதியும், லாக் ஸ்கிரீன் கடிகாரத்தின் அளவைச் சிறியதாக்கும் விருப்பமும் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு கட்டுப்பாடுகள்

குடும்பப் பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளுக்கான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய வசதிகள் இதில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. 'ஆஸ்க் டூ பை' மற்றும் 'ஆஸ்க் டூ பிரவுஸ்' மூலமாக குழந்தைகள் பார்க்கும் உள்ளடக்கங்களை கண்காணிப்பதுடன், பயன்பாட்டு நேர வரம்புகளையும் அமைக்க முடியும். மேலும், அழைப்புகள், அலாரம், டைமர் மற்றும் அறிவிப்புகளுக்குத் தனித்தனியாக ஒலி அளவைக் கட்டுப்படுத்தும் வசதி, புதிய போன் செயலி வடிவமைப்பு மற்றும் சபாரி உலாவியில் தலைப்புகளின் அடிப்படையில் டேப்களைப் பிரிக்கும் அம்சம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

ஆதரவு அளிக்கும் ஐபோன் மாடல்கள்

புதிதாக அறிமுகமான ஐபோன் 18 தொடர் மற்றும் ஐபோன் டியூ ஆகிய மாடல்களில் இந்த iOS 27 இயங்குதளம் முன்னதாகவே நிறுவப்பட்டு வருகிறது. இது தவிர, ஐபோன் 11 தொடர் முதல் அதற்குப் பிந்தைய அனைத்து மாடல்கள் மற்றும் இரண்டாம், மூன்றாம் தலைமுறை ஐபோன் SE மாடல்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கிறது. பயனர்கள் தங்கள் ஐபோனின் 'Settings' பகுதிக்குச் சென்று, 'General' என்பதைத் தேர்ந்தெடுத்து 'Software Update' என்பதைக் கிளிக் செய்து இந்த புதிய iOS 27 பதிப்பைத் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.

SCROLL FOR NEXT