திண்டிவனம் அருகே திருவக்கரையில் உள்ள வக்ர காளியம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு விடியற்காலை முதல் வக்ர காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வக்ர காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதைத்தொடர்ந்து கோவில் மேல் பிரகாரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷத்துடன் மகா தீபத்தை தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் தென் தமிழகம், சென்னை, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள்இயக்கப்பட்டன.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் நாகராஜன், ஆய்வாளர் சரவணன், சிவாச்சாரியார் சேகர் குருக்கள், மேலாளர் ரவி ஆகியோர் செய்து இருந்தனர்.