லாலாப்பேட்டை:
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அடுத்த பாளையத்தில் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 5ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்த்திருவிழா நடைபெறும். இங்கு சுற்றுபுற கிராம பொதுமக்கள் மற்றும் வெளியூரில் இருந்து பக்தர்கள் வழிபட்டு செல்வர்.
இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு திம்மாச்சிபுரதைச் சேர்ந்த பூசாரி குமாரசாமி பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை வழக்கம் போல் கோவிலை திறக்க சென்றுள்ளார். அப்போது கோவிலின் பூட்டு உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சிஅடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருட்டு போயிருந்தது.
இது குறித்து லாலாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.