திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது வரவேற்க்கதக்கது என முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் வரும் நவம்பர் 24, 2026 கார்த்திகை தீபத் திருநாளன்று மட்டும் ஒருமுறை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் (நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அமர்வு) இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் கருத்துக்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியுள்ளதைப் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்ப்பதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது
இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பல்வேறு குழப்பமான வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவற்றை ஏற்காமல் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் விசாரணை தொடரும் நிலையில், இந்த ஆண்டு இந்துக்களின் நியாயமான வேண்டுகோளை ஏற்று உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான பக்தர்களின் வேண்டுதல் கைகூடியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பெறுவதற்காகப் போராடிய, வாதாடிய அனைவருக்கும், ஒத்துழைப்பு நல்கிய நல்ல உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறை நம்பிக்கையும், வழிபாட்டு உரிமையும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளாகும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மத வழிபாட்டு உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் முக்கியக் கடமையாகும்.
அந்த வகையில், பக்தர்களின் நீண்டகாலக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்று, தீபம் ஏற்றுவதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை தீபத் திருநாள் என்பது தமிழர்களின் ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்துடன் பின்னிப் பிணைந்த திருவிழாவாகும். இத்தகைய புனிதமான நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எவ்விதத் தடையும் ஏற்படாத வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவிடாமல் இதுவரை செய்து வந்த இடையூறுகளை இனிமேலாவது தவெக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாகவும், காலதாமதமின்றியும் நடைமுறைப்படுத்த வேண்டியது தமிழக அரசின் பொறுப்பாகும்.
சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் அதே நேரத்தில், பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்கு மதிப்பளித்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
வரும் நவம்பர் 24-ஆம் தேதி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குத் தமிழக அரசு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாகச் செய்ய வேண்டும். காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நீதிமன்ற உத்தரவை மதிப்பதும், மக்களின் வழிபாட்டு உரிமையைப் பாதுகாப்பதும் ஜனநாயக அரசின் கடமையாகும். அந்தக் கடமையைத் தமிழக அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
என்று குறிப்பிட்டுள்ளார்.