எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா-வி.எஸ்.பாபு மறைவு: தமிழகத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜனவரியில் இடைத்தேர்தல்

புதிய தலைமைச் செயலகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இடதுசாரி கட்சிகள், அரசின் பல்வேறு முடிவுகளை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இடைத்தேர்தல்
இடைத்தேர்தல்
Published on: 
Summary

தமிழகத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளதால், ஜனவரியில் இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. வி.எஸ்.பாபுவின் மறைவு மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா காரணமாக தேர்தல் சூழல் பரபரப்பாக உள்ளது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வியூகங்களை தீவிரமாக அமைத்து வருகின்றன.

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பான தேர்தல் களம் சூழ்ந்துள்ளது. கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு திடீர் மறைவு, தொகுதி காலி செய்தல் மற்றும் கட்சி தாவல் ஆகிய காரணங்களால் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற ஜனவரி மாதம் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. ஏற்கனவே தாராபுரம் மற்றும் மதுராந்த கம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது காலியாக உள்ள தொகுதிகளுக்கான தேர்தலை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

6 தொகுதிகள் காலி

தமிழகத்தில் திருச்சி கிழக்கு, கொளத்தூர், பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம் மற்றும் கரூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. இதில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல், கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு நேற்று (வியாழக்கிழமை) மரணம் அடைந்ததால் அந்த தொகுதியும் காலியானது. இந்த தொகுதிகளில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், புதுக்கோட்டை மற்றும் பெருந்துறை ஆகிய பகுதிகளில் முதலமைச்சர் விஜய் சுற்றுப்பயணம் செய்து நலத்திட்டங்களை வழங்கினார். அந்த வகையில் இன்று திருச்சி செல்ல இருந்தார். ஆனால், வி.எஸ். பாபுவின் மறைவு காரணமாக திருச்சி பயணம் ரத்து செய்யப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக இருந்த கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை டாக்டர் சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எஸ்.ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தனர். இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக்கொண்டதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், த.வெ.க. சின்னத்தில் சமீபத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களது 2 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 6 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனுக்கள் மீது 2 மாதங்களுக்குள் முடிவெடுக்க சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபாநாயகரின் இந்த விசாரணையை அ.தி.மு.க. உன்னிப்பாக கவனித்து வருகிறது.

பொங்கலுக்கு பிறகு வாக்குப்பதிவு?

இந்நிலையில், கோவா, உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்களுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கும் ஜனவரி மாதம் இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இதற்கான தேர்தல் அட்டவணை ஜனவரி மாதம் வெளியிடப்பட்டு, பொங்கல் பண்டிகைக்கு பிறகு வாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வியூகம்

இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், ஆளுங்கட்சியான த.வெ.க. மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், இடதுசாரி கட்சிகள் என அனைத்துத் தரப்பினரும் தற்போதே தேர்தல் வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் இந்த இடைத்தேர்தலில் பல முனை போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் வெற்றிகளை தொடர்ந்து, இந்த 6 தொகுதிகளிலும் வெற்றி பெற த.வெ.க. தீவிரம் காட்டி வருகிறது. அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோரையே மீண்டும் வேட்பாளர்களாக களமிறக்க த.வெ.க. திட்டமிட்டுள்ளது. கட்சி மாறியபோதே இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க உறுதியளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க., நாம் தமிழர் மும்முரம்

மறுபுறம், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட ஆலோசித்து வருகிறார். தி.மு.க.வும் தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகிறது. இது குறித்து தி.மு.க. செய்தித் தொடர்பாளர் இ.பரந்தாமன் கூறுகையில், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் எங்கள் வேட்பாளர்களை நாங்கள் முடிவு செய்வோம். குறைவான கூட்டணிக் கட்சிகள் இருந்த போதிலும், சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க.வின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இது தி.மு.க. மீது வாக்காளர்கள் வைத்துள்ள நம்பிக்கையையும், சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் விலைவாசி உயர்வு (பணவீக்கம்) ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய த.வெ.க. அரசை மக்கள் நிராகரித்துள்ளதையும் பிரதிபலிக்கிறது என்றார்.

இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டி

இடதுசாரி கட்சிகள் வழக்கம் போல் தனித்து போட்டியிட உள்ளன. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்.) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், த.வெ.க. அரசுக்கு அளிக்கும் எங்களது ஆதரவில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், தேர்தலில் வெற்றி பெற்ற 3 வாரங்களுக்குள் ஒரு கட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு மற்றொரு கட்சியில் இணைவது ஆரோக்கியமான அரசியல் அல்ல. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. குதிரை பேரம் விவாத பொருளாக இருந்தபோது, கட்சி மாறிய அத்தகைய வேட்பாளர்களுக்காக நாம் எப்படி வாக்கு கேட்க முடியும்?. மேலும், டிசம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநிலக் குழுக் கூட்டத்தில் இடைத்தேர்தல்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

சி.பி.ஐ. தீர்மானம் நிறைவேற்றம்

இதற்கிடையில், புதிய தலைமைச் செயலகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இடதுசாரி கட்சிகள், அரசின் பல்வேறு முடிவுகளை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற சி.பி.ஐ. மாநிலக் குழுக் கூட்டத்தில், மாநிலத் திட்டக் குழு மற்றும் மத்திய-மாநில உறவுகளுக்கான குரியன் ஜோசப் குழு ஆகியவற்றை மீண்டும் அமைக்க வேண்டும், எஸ்.சி., எஸ்.டி. ஆணையத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி எம்.வி. முரளிதரனை நீக்க வேண்டும், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்தை எதிர்க்க அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், தேர்தல் அட்டவணை வெளியான பிறகு இடைத்தேர்தல் குறித்து கட்சி முடிவெடுக்கும் என தெரிவித்துள்ள சி.பி.ஐ. மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், அரசியல் காரணங்களுக்காகவே நாங்கள் சமீபத்திய இடைத்தேர்தல்களில் போட்டியிட்டோம். த.வெ.க.வை ஆதரிக்க முடியாது என்ப தால், தேர்தலில் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

இதனால் நடைபெற உள்ள இந்த 6 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X