தமிழக செய்திகள்

மாதவரம்-சிறுசேரி, சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ வழித்தடங்களில் சுரங்கம், மேம்பால பாதை அமைக்கும் பணிகள் தீவிரம்

ஐந்தாவது வழித்தடமாக சுமார் 47 கி.மீ. நீளத்தில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரெயில் சேவை பணிகளும் நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் 46 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் மற்றும் சிறுசேரி வரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2028-ம் ஆண்டுக்குள் பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்கள் வடசென்னையை தென் சென்னையுடன் இணைத்து, பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும்.

சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக போக்குவரத்து வசதிகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டாயம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

சென்னை மாநகர பகுதிகளில் மட்டும் இன்றி தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சியையொட்டி உள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் லட்சக்கணக்கானோர் தங்களது அன்றாட பயணங்களுக்காக பஸ் போக்குவரத்தை விட ரெயிலில் பயணிப்பதையே அதிகம் விரும்புகிறார்கள்.

சென்னை மாநகரில் மின்சார ரெயில்கள் பொது போக்குவரத்துக்கு பெரிதும் கை கொடுத்து உதவுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சார ரெயில்களில் அலைமோதும் கூட்டமே அதற்கு சாட்சியாகும்.

அதனுடன் சேர்ந்து மெட்ரோ ரெயிலும் பயணிகளின் சொகுசான போக்குவரத்துக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலும், சென்ட்ரல் முதல் மவுண்ட் வரையிலும் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்திலும் சமீபத்தில் மெட்ரோ ரெயில் ஓட தொடங்கியுள்ளது.

காலதாமதம்

அடுத்தகட்டமாக 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ், 3-வது வழித்தடமாக சுமார் 45.8 கி.மீ. நீளத்தில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை அமைக்கப்பட உள்ள மெட்ரோ பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான வழித்தடத்தில் மாதவரத்திலிருந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் 19.1 கி.மீ. தூரம் சுரங்கப்பாதைகள் கொண்ட வழித்தடமாகவும், 26.7 கி.மீ. உயர்மட்டப் பாதைகள் கொண்ட வழித்தடமாகவும் அமைப்பதற்கு ஏற்கனவே பணிகளை முடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் வழித்தட பணிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் ஓடுவதில் மேலும் காலதாமதமாகி வருகிறது.

2028-ம் ஆண்டுக்குள் பணிகளை முடித்து ரெயில்கள் முழுமையாக இயக்கப்படும் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாதவரத்தில் இருந்து சிறுசேரி வரையிலும் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

ஐந்தாவது வழித்தடமாக சுமார் 47 கி.மீ. நீளத்தில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரெயில் சேவை பணிகளும் நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் 46 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சுமார் 41 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்டப் பாதையாக அமையவிருக்கும் இத்தடத்தில் ரெயில் பாதைகள் அமைப்பதற்காக பிரமாண்ட தூண்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கட்டப்பட்டு உள்ளது. மாதவரம்- சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் சுமார் 5.8 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மாதவரம்- சோழிங்கநல்லூர் வழித்தடத்திலும், ரெட்டேரி சந்திப்பு வரை உயர்மட்டப் பாதைக்கான தூண்கள் மற்றும் தூண்களின் மேல் இணைப்புப் பாதைகள் அமைவதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. மாதவரத்தில் பிரமாண்டமான பணிமனை ஒன்றும் முழுவீச்சில் அமைப்பதற்கான பணிகளும் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.

இவ்வழித்தடத்தில் கொளத்தூர் (ரெட்டேரி சந்திப்பு) முதல் வில்லிவாக்கம் (நாதமுனி) வரை சுரங்கப்பாதையாக அமையவிருக்கிறது. சென்னையின் துணைப் பேருந்து நிலையமாகக் கருதப்படுகிற மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், இந்தச் சந்திப்பிற்கு அருகிலேயே அமையப் பெற்றுள்ளது. இங்கிருந்து ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களுக்கும் தொலைதூரப் பயணங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத் திட்டத்தில் வடசென்னையின் முக்கிய மையமாக மாதவரம் அமைகிறது. இங்கு 3-வது மற்றும் 5-வது வழித்தடங்களுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாதவரத்தில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை (3-வது வழித்தடம்-50 நிலையங்கள்) மற்றும் மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்-48 நிலையங்கள்) மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன.

மாதவரம் பால் பண்ணை மெட்ரோ நிலையம் 3-வது மற்றும் 5-வது வழித்தடங்களை இணைக்கும் முக்கியச் சந்திப்பு நிலையமாக செயல்பட உள்ளது. மாதவரம்-மூலக்கடை இடையிலான சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்படி மாதவரத்தில் இருந்து சிறுசேரி மற்றும் சோழிங்கநல்லூருக்கு அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் பணிகளை விரைவில் முடித்து 2028-ம் ஆண்டுக்குள்ளாவது இயக்க வேண்டும் என வடசென்னை பகுதி மக்களும், திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்பட்ட செங்குன்றம், ஆவடி, அம்பத்தூர் பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடசென்னை பகுதியில் இருந்து தென் சென்னையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இந்த மெட்ரோ ரெயில் தடம் இருப்பதால் 2 வழித்தடங்களிலும் ரெயில்கள் ஓட தொடங்கி விட்டால் நிச்சயம் அது பொது மக்களுக்கு பெரிய அளவில் போக்குவரத்துக்கு பயன்படுவதாகவே இருக்கும்.

மாதவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இந்த வழித்தடங்களில் ரெயில் இயக்கப்பட உள்ள வழித்தட பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பலர் சிறுசேரி பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்துக்கு செல்ல இந்த ரெயில் பயணம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் பணிகளை மின்னல் வேகத்தில் முடித்து விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர மெட்ரோ நிறுவன அதிகாரிகளும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-சிறுசேரி சிப்காட் மெட்ரோ வழித்தட பட்டியல் வருமாறு:-

மாதவரம்-சோழிங்கநல்லூர்

1. மாதவரம் பால் பண்ணை

2. மாதவரம் பணிமனை

3. அசிசி நகர்

4. மஞ்சம்பாக்கம்

5. வேல்முருகன் நகர்

6. மாதவரம் பஸ் முனையம்

7. சாஸ்திரி நகர்

8. ரெட்டேரி சந்திப்பு

9. கொளத்தூர் சந்திப்பு

10. சீனிவாச நகர்

11. வில்லிவாக்கம்

12. வில்லிவாக்கம் பஸ் நிலையம்

13. வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலை

14. அண்ணா நகர் மேற்கு-பணிமனை

15. திருமங்கலம்

16. அண்ணா நகர் கே.வி.

17. கோயம்பேடு

18.கோயம்பேடு மார்க்கெட்

19. நடேசன் நகர்

20. விருகம்பாக்கம்

21. ஆழ்வார்திருநகர்

22. வளசரவாக்கம்

23. காரம்பாக்கம்

24. ஆலப்பாக்கம்

25. முகலிவாக்கம்

26. ராமாபுரம்

27. மணப்பாக்கம்

28. அடையாறு நதி

29. சென்னை வர்த்தக மையம்

30. பட் சாலை

31. ஆலந்தூர்

32. பரங்கிமலை

33. ஆதம்பாக்கம்

34. வானுவம்பேட்டை

35. உள்ளகரம்

36. மடிப்பாக்கம்

37. கீழ்க்கட்டளை

38. ஈச்சங்காடு

39. கோவிலம்பாக்கம்

40. வெள்ளக்கல்

41 மேடவாக்கம்-1

42. மேடவாக்கம்-2

43. பெரும்பாக்கம்

44.செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் / எல்காட்

45.சோழிங்கநல்லூர்

மாதவரம்-சிறுசேரி சிப்காட்

1. மாதவரம் பணிமனை

2. மாதவரம் பால் பண்ணை

​3. மாதவரம் நெடுஞ்சாலை

4​. மூலக்கடை

5. ​செம்பியம்

​6. பெரம்பூர் மார்க்கெட்

7. ​பெரம்பூர் (புறநகர் ரெயில் நிலைய சந்திப்பு)

​8. அயனாவரம்

​9. ஓட்டேரி

10. ​பட்டாளம்

​11. பெரம்பூர் பேரக்ஸ் சாலை

12. ​புரசைவாக்கம்

​13. கெல்லீஸ்

​14. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி

​15. சேத்துப்பட்டு

​16. ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு

17. ​நுங்கம்பாக்கம்

​18. அண்ணா மேம்பாலம்

​19. ஆயிரம் விளக்கு

20. ​ராயப்பேட்டை

​21. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை

​22. திருமயிலை

​23. மந்தைவெளி

​24. பசுமைவழிச் சாலை

​25. அடையாறு சந்திப்பு

​26. அடையாறு பணிமனை

27. ​இந்திரா நகர் ​

28. திருவான்மியூர்

​29. தரமணி

​30. நேரு நகர்

​31. கந்தன்சாவடி

32. ​பெருங்குடி

​33. துரைப்பாக்கம்

​34. மேட்டுக்குப்பம்

​35. பி.டி.சி. காலனி

​36. ஒக்கியம்பேட்டை

37. காரப்பாக்கம்

38. ​ஒக்கியம் துரைப்பாக்கம்

​39. சோழிங்கநல்லூர்

​40. சோழிங்கநல்லூர் ஏரி 1

​41. சோழிங்கநல்லூர் ஏரி 2

​42. செம்மஞ்சேரி 1

​43. செம்மஞ்சேரி 2

​44. காந்தி நகர்

​45. நாவலூர்

​46. சிறுசேரி

​47. சிறுசேரி சிப்காட் 1

​48. சிறுசேரி சிப்காட் 2

SCROLL FOR NEXT