பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய 2-வது உவர்ப்பு நீர் ஏரியாகும்.
பழவேற்காடு பகுதியை சுற்றிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த ஏரியை நம்பி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். சமீப காலமாக கடலும் ஏரியும் சேரும் முகத்து வாரத்தில் கடல் மண் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனால் கடல் நீர் ஏரிக்கும், ஏரி நீர் கடலுக்கும் செல்வது தடைபட்டதோடு ஏரியின் ஆழம் குறைந்து காணப்படுகிறது.
இதில் லைட் ஹவுஸ் குப்பம் அரங்கம் குப்பம் உள்ளிட்ட 13 கிராம மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும்போது முகத்துவாரம் வழியாக செல்கின்றனர்.
முகத்துவாரம் மணல் திட்டால் மூடப்பட்டுள்ளதால் அவ்வழியே படகுகளை கொண்டு செல்லமுடியாமல் மீனவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
இதேபோல் பழவேற்காடு மீன்பிடி இறங்கு தளம் அருகே படகு நிறுத்துவதற்கு முடியாமல் படகு தரை தட்டுவதால் மீனவர்கள் ஏரியை ஆழப்படுத்தி படகு நிறுத்துவதற்கு வழி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை சார்பில் பழவேற்காடு மீன்பிடி இறங்குதளம் புதுப்பித்தல் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.6.8 கோடி மதிப்பில் மீன் விற்பனை கூடம், ஏல கூடம், கூட்டஅரங்கம், கழிவறை புதுப்பித்தல் மற்றும் விற்பனை கடைகள், படகு போக்குவரத்து ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் பழவேற்காடு ஏரியில் 500 மீட்டர் தூரம் ஜே.சி.பி.எந்திரம் மற்றும் ராட்சத எந்திரங்கள் மூலம் படகுகளை நிறுத்தும் வகையில் ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கட்டுமான பணிகள் 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் இன்னும் 5 மாதத்தில் பணிகள் முழுமை யாக நிறைவு பெறும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.