காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை முடக்க காங்கிரஸ் நடத்தும் சதியை தவெக அரசு முறியடிக்குமா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் கனவுத் திட்டமான காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் கைகூடி வரும் நேரத்தில், திட்டத்தை முடக்க காங்கிரஸ் நடத்தும் சதியை முறியடிக்கும் தைரியமும்-திறனும் தவெக அரசுக்கு உள்ளதா? என்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுபியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
வரலாறு நெடுக தமிழகத்திற்கு துரோகம் செய்வதை மட்டுமே கொள்கையாகக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி இதையெல்லாம் செய்யும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.
ஆனால், அந்த காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டு இருக்கும் தவெக இதை ஏற்கிறதா?காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது எனது தலைமையிலான அதிமுக அரசு இருந்தபோது Formulation-க்கு கொண்டுவரப்பட்ட ஒரு அற்புதமான திட்டம். தென்னிந்தியாவின் மிகப்பெரிய நீர் இணைப்புத் திட்டமான இது நிறைவேறினால், தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
ஆந்திராவில் Polavaram Project வெற்றிகரமாக செயல்படும் நிலையில், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் கைகூடி வரும் சூழல் இருக்கும் நேரம் பார்த்து இப்படி ஒரு மனுவை கர்நாடக காங்கிரஸ் அரசு தாக்கல் செய்துள்ளது.
மேலும், சரபங்கா திட்டம், புதிய கட்டளை நீர்ப்பாசனத் திட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டம், நொய்யல் ஆறு மற்றும் கல்லணை வடிகால் நீர்த் திட்டங்கள் என பல்வேறு திட்டங்களுக்கு தடை கோரியுள்ளது.
இத்திட்டங்கள் கடலில் நீர் வீணாகப் போய் கலக்கும் நீர் விவசாயத்திற்கு பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கொண்டுவரப்பட்டவை. இவற்றில் சில, நான் முதலமைச்சராக இருந்தபோது பார்த்துப் பார்த்து செய்த திட்டங்கள். இதன் அருமை எல்லாம் விவசாயம் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருந்தால் தான் புரியும்.
மேகதாது அணையைக் கட்டக் கூடாது என தமிழகம் போராடுவது என்பது Lower Riparian State-க்கான உரிமை ஆனால், தமிழகத்தின் திட்டங்களுக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு தடை கோருவது என்பது அப்பட்டமான அடாவடித்தனம்.
இப்படி ஒரு மனுவை தாக்கல் செய்ய கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு தைரியம் வருகிறது என்றால், தங்கள் கூட்டணியில் உள்ள தமிழக தவெக அரசு ஒரு கையாலாகாத “வெற்று” அரசு என்பதை காங்கிரஸ் உணர்ந்திருப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
சோகம் என்னவென்றால், இப்போது நான் கூறிய எதுவுமே இன்றைய ஆச்சரியக்குறி முதல்வருக்கு என்னவென்றே தெரியாது என்பது தான்.
இதையெல்லாம் விளக்கி, உங்களுக்கு கொஞ்சமாவது புரிதலைக் கொண்டுவரத் தான் அனைத்து கட்சித் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று சொன்னேன். அதையும் நீங்கள் செய்யவில்லை.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நீராதாரத்திற்கும் சவால் விடப்பட்டுள்ளதை உணர்ந்து, காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட அனைத்து நீர்ப் பாசனத் திட்டங்களையும் காத்திட அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் திடமாக மேற்கொள்ள வேண்டுமென இந்த அரசையும் முதல்வரையும் வலியுறுத்துகிறேன்
என்று குறிப்பிட்டுள்ளார்.