சென்னை:
சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அளித்த பேட்டி வருமாறு:-
பறக்கும் படை சோதனையின்போது பிடிக்கப்படும் பணம், பொருட்களுக்கான உரிய ஆவணங்களை காட்டினால் அப்போதே அதை திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். இந்த தகவலையும் தேர்தல் கமிஷன் வெளியிடும்.
சி-விஜில் செயலியை மக்கள் பயன்படுத்த வேண்டும். தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்களை படம் பிடித்து அனுப்ப வேண்டும். இதை மக்களிடம் இருந்து தேர்தல் கமிஷன் அதிகம் எதிர்பார்க்கிறது. இந்த செயலியில் புகார் கூறும் யாருடைய பெயரும் வெளியில் வராது.
போலீஸ் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் அனைவரும் தமிழகத்திற்கு வந்துவிட்டனர். கடந்த தேர்தலில் நியமிக்கப்பட்ட செலவினப் பார்வையாளர்களின் எண்ணிக்கையைவிட இந்த தேர்தலுக்கு கூடுதல் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செலவினம் அதிகமாக செய்யப்படக்கூடிய தொகுதிகளாக 108 தொகுதிகள் முன்பு பட்டியலிடப்பட்டு இருந்தன. 2 தொகுதிக்கு ஒரு செலவினப்பார்வையாளர் என்ற அளவில் நியமிக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை 151 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு முகமைகளிடம் தேர்தல் கமிஷன் கேட்டறிந்து, அதிக செலவு செய்யக்கூடிய தொகுதிகளை கண்டறிந்து, செலவினப் பார்வையாளர்களை நியமிப்பார்கள். தமிழகம் அதிக தேர்தல் செலவு செய்யும் மாநிலம் என்ற பெயர் ஏற்கனவே உள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 26-ந் தேதி வரை காலம் உள்ளது. அதுவரை வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பெயர் சேர்க்கப்படும். வேட்புமனு தாக்கல் அன்று வாக்காளர் துணைப்பட்டியல் வெளியிடப்படும்.
பத்திரிகையாளர்கள், அத்தியாவசிய துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் அவர்களும் தபால் வாக்கு செலுத்தலாம். அவர்கள் தபால் ஓட்டுக்கான விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட துறையின் ஒருங்கிணைப்பு அதிகாரியின் (நோடல் ஆபிசர்) கையொப்பத்தை பெற வேண்டும்.
அந்த விண்ணப்பத்தை, ஓட்டுபோட இருக்கும் இடத்தின் தேர்தல் நடத்தும் அதிகாரியின்(ஆர்.ஓ.) கொடுத்து, அவரிடம் தபால் வாக்கை வாங்கி அங்கேயே போட்டுவிடலாம். வாக்குப்பதிவன்று பத்திரிகையாளர்கள் பணியில் இருப்பார்கள் என்பதால் அதற்கு முன்பதாகவே வாக்கு செலுத்த இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிக்கான பட்டியலில் 12 துறைகளின் பணியாளர்கள் உள்ளனர். அந்த 12 துறையினரும் தபால் வாக்கு செலுத்தலாம்.
நடிகரும்.த.வெ.க. தலைவருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' பட வெளியீட்டிற்கு தணிக்கைக் குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துவிட்டன. அவை அமலில் இருக்கும்போது. ஒரு நடிகனாகவும், கட்சித் தலைவராகவும் இருப்பவர் வேட்பாளராகிவிட்டால், அவர் நடித்த சினிமாவை வெளியிடுவதற்கு தேர்தல் கமிஷனின் ஒப்புதலை பெற வேண்டுமா? என்று கேட்கிறீர்கள். இது நல்ல கேள்விதான். ஆனால் இது முதன்முறையாக நடக்கும் சம்பவம். இதுபற்றி தேர்தல் கமிஷனிடம் கேட்டு பதிலளிக்கிறேன். இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் முடிவெடுத்து விளக்கம் அளிக்கும்.
பதற்றமான வாக்குச்சாவடிகள் பற்றி தேர்தல் பார்வையாளர்களுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். புதிதாக தரப்படவுள்ள வாக்காளர் தகவல் சீட்டின் மேல் பகுதியில் வாக்காளரின் பாகம் எண் உள்ளிட்ட விவரங்கள் தனியாக கட்டமிட்டு காட்டப்பட்டு இருக்கும். அதை முன்புபோல் தேடி கண்டுபிடிக்க தேவையில்லை.
ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள்தான் என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பள்ளிக்கூடங்கள் தவிர மற்ற அடுக்குமாடி குடியிருப்புகளிலும் கீழ் தளத்தில் வாக்குச்சாவடிகளை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை சென்னை, கோவையில் முயற்சிக்கிறோம்.
ஆன்லைன் மூலம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். அப்படி செய்தாலும் அந்த ஆவணங்கள் அனைத்தையும் நகலெடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நேரில் வந்து தாக்கல் செய்வதும் அவசியம்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 50 கம்பெனி துணை ராணுவத்தினர் ஏற்கனவே தமிழகத்திற்கு வந்துள்ளனர். மேலும் 250 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவுள்ளனர். கடந்த தேர்தலிலும் இதே எண்ணிக்கையில் துணை ராணுவத்தினர் இருந்தனர். கூடுதலாக தேவைப்பட்டால் தேர்தல் கமிஷனிடம் கேட்டு பெறலாம். ஆனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் இல்லை. ஒரு கம்பெனியில் 70 முதல் 90 வரை துணை ராணுவத்தினர் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.