தமிழக செய்திகள்

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி? - டிஜிபியிடம் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு

முதலமைச்சர் விஜய்மீதும் நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தியுள்ளது.

அரசு அதிகாரிகள் அல்லது சட்டரீதியாக பொறுப்பு வழங்கப்பட்டவர்கள் என எந்த பதவியிலும் இல்லாத ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில், அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்பதாக சமீபநாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாடு டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலிடம் புகார் மனு அளித்துள்ளார். தொடர்ந்து இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“மக்களிடையே போதுமான பெரும்பான்மையை பெறாமல் மைனாரிட்டியோடு அமைக்கப்பட்டுள்ள விஜய் ஆட்சி தொடர்ந்து பல்வேறு தவறுகளை செய்துகொண்டிருக்கிறது.

குதிரை பேரம் நடத்தி வருகிறது தவெக அரசு. ஒரு கட்சியின் சார்பில் வெற்றி பெற்றுவிட்டு பதவிக்காக ஆளுங்கட்சிக்கு போவது இதுவே முதல்முறை. குதிரை பேரத்தில் தொடங்கிய இந்த விஜய் ஆட்சி பல்வேறு தவறுகளை செய்துகொண்டிருக்கிறது.

விஜய்க்கு ஆட்சி செய்ய தெரியவில்லை என்றால் யாரிடம் ஆவது டியூஷன் சென்று கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்காக அரசுக்கு தொடர்பில்லாத ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய தனியாரிடம் அரசின் நடவடிக்கைகளை மேற்கொள்ள விட்டுவிடுவது ஏற்புடையதல்ல.

தமிழர்களே அல்லாத இவர்கள் எந்த முறையில் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் அமைச்சரவை கூட்டத்திற்கும் அரசு சார்பில் நடத்துகிற அனைத்து கூட்டத்திற்கும் எப்படி கலந்துகொண்டிருக்கிறார்கள். விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் பொழுது ரகசிய காப்புரிமை எடுத்துக் கொள்கிறார்.

ஆனால் அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் இவர்களுக்கு தெரியப்படுத்துகிறார். குறிப்பாக முதல்வரின் அறைக்கு அருகிலேயே இவர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் இவர்கள் கலந்து கொள்கின்றார்கள் . இவர்கள் அரசு கூட்டங்களில் பங்கேற்பது கண்டனத்திற்குரியது.

அவர்கள் மீது மற்றும் அவர்களுக்கு அனுமதி அளித்த முதல்வர் மீதும் காவல்துறையானது நடவடிக்கை எடுக்க வேண்டி காவல்துறை தலைமை இயக்குனருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அவர் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் நீதிமன்றம் வாயிலாக இதற்கு சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு நீதியை பெறுவோம்.” என தெரிவித்துள்ளார்.