எம். வீரபாண்டியன்
தமிழக செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கட்சிகளால் தனித்து நிற்க முடியும்: வீரபாண்டியன் பேட்டி

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்)-க்கு நாடு முழுவதும் கட்சி கட்டமைப்பு உள்ளது. எனவே இடதுசாரி கம்யூனிஸ்டுகள் தனித்து நிற்க முடியும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

தனித்து போட்டி

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா கூட்டணி அமைத்து போட்டிடுவதா என்பது பற்றி அப்போதுள்ள அரசியல் சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்வோம். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்)-க்கு நாடு முழுவதும் கட்சி கட்டமைப்பு உள்ளது. எனவே இடதுசாரி கம்யூனிஸ்டுகள் தனித்து நிற்க முடியும்.

இடதுசாரிகள் ஒருங்கிணைப்புடன் செயல்படும். தமிழர்கள் நலன், உழைக்கும் மக்கள் நலனுக்காக ஜனநாயக சக்தியோடு ஈரோடு இணைந்து போராடுவோம். எந்த முடிவு எடுத்தாலும் இடதுசாரிகள் ஒருங்கிணைப்பு குழு இணைந்துதான் முடிவு செய்யும்.

திருப்தி

இந்த அரசு செயல்படுவதற்கு சிறிது கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். மேகதாது பிரச்சினை, திருக்கழுக்குன்றம் கோவில் விவகாரத்தில் அரசின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது.

மதசார்பின்மையை விட்டு விலகிச் செல்லக் கூடாது, பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் சமரசத்திற்கு இடமில்லை. த.வெ.க. அரசுக்கு பக்க பலமாக இருப்போம். ஒவ்வொரு விஷயத்திலும் அரசுக்கு நெருக்கடி தரக்கூடாது. லஞ்சம் ஊழல் விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம்.

முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக சிறந்த நலத்திட்டங்களை செயல்படுத்தினார். இதனை இந்தியா முழுவதும் மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன. அந்தத் திட்டங்களை விட்டு விடக்கூடாது. தொடர்ந்து பின்பற்ற வேண்டும். போதை பழக்கத்தை மெல்ல மெல்ல விடுவிக்க விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

புழல் ஏரி

உழைக்கும் மக்களுக்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். சாலை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள், சிறு குறு விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளை அரசு படிப்படியாக நிறைவேற்ற வேண்டும்.

சிறுமிகளை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசியலில் தலைவர்கள் ஒவ்வொருவரும் தாக்கிப் பேசும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். ஒவ்வொருவருக்கும் கடமைகள் பொறுப்புகள் உண்டு.

ஏரிகள், குளங்கள் மாசுபடுகின்றன, புழல் ஏரி முழுவதும் மாசுபட்டு உள்ளன. பல ஆண்டுகளாக இந்த நிலை நீடிக்கிறது. அதனை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

எந்த ஜனநாயக சக்தியும் எங்களுக்கு எதிரி இல்லை. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. மட்டுமே பிரதான எதிரியாகும். கொள்கை, அரசியல் ரீதியாக அவர்களை எதிர்க்கிறோம். வெறுப்பு அரசியல் அல்ல.

குதிரை பேரம்

குதிரை பேரம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதை இன்னும் கண் முன்னே அரங்கேறுவதை காண்கிறோம். மறைப்பதற்கு இதில் ஒன்றும் இல்லை. வட இந்திய மாநிலங்களில் இருந்து படிப்படியாக இது தமிழகத்திற்கு பரவியுள்ளது. இது நல்லதல்ல. இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது அரசியல் நலன்களை பாதுகாக்கவும் பதவியில் நீடிக்கவும் இது போன்ற நடைமுறைகளை கையாளுகிறார்கள். வாக்காளர்களின் கைகளில் உள்ள மை மறைவதற்கு முன்பே சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறினால் அது மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி இதில் சம்பந்தப்பட்டு இருந்தாலும் குதிரை பேரத்தை இடதுசாரி கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.