

கும்பகோணத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழக அரசு வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரியும், ஒன்றிய அரசு இதுவரை நிறுத்தி வைத்துள்ள தமிழகத்திற்கான நிதிகளை உடனடியாக வழங்கிட வலியுறுத்தியும் நாளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற சிந்தனை கர்நாடக அரசிற்கு வரக்கூடாது. இதனை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. ஒட்டுமொத்த தமிழ் சமூகமும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, ஒன்றுபட்டு, ஒற்றுமையாக இருந்து இதனை எதிர்க்க வேண்டும்.
தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே இரு ஜனநாயக சக்திகள், இவை இணைவதையோ அல்லது ஒன்று சேர்ந்து ஏதேனும் பிரச்சினைக்காக போராடுவதையோ இந்திய கம்யூனிஸ்டு கட்சி எதிர்க்கவில்லை. எங்களை பொறுத்தவரை பா.ஜ.க. தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அரசியல் நிலைப்பாடு.
எனவே, அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் நீடிக்கும் நிலையிலேயே அ.தி.மு.க.வை எதிர்க்க வேண்டிய நிலை உள்ளது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக பிரதிநிதியான ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் நெருடல் என்பதுதான் எங்கள் கட்சியின் நிலை.
40, 50 ஆண்டு காலம் ஆண்ட கட்சிகளுடன் 40 நாட்களே ஆகும் தமிழக வெற்றிக் கழக அரசின் ஆட்சி குறித்து இப்போது ஒப்பிட கூடாது. சட்டம்- ஒழுங்கை காப்பதில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திருப்பரங்குன்றம், மேகதாது இதுதான் முக்கிய பிரச்சனை, இதில் தெளிவாக இவர்கள் முந்தைய அரசின் நிலைப்பாட்டை கடைபிடிக்கிறார்கள். இது நல்லது. அதனை வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் வக்கீல் பாரதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.