தமிழக செய்திகள்

‘முதலமைச்சர் பேசியது மிகவும் தவறானது... அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பேசியதும் தவறு’ - பெ.சண்முகம்

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றுப் பேசிய முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஏளனம் செய்யும்வகையில் பேசினார். இதற்கு அவையின் வெளியே வந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சரின் இந்த பேச்சு மிகவும் தவறானது என்றும், அதற்கு எதிர்க்கட்சித் தலைவரின் பதிலும் தவறானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

“தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. அதிலும் குறிப்பாகச் சட்டமன்றத்தில் இல்லாத ஒருவரைப் பற்றி, "அப்பாவைக் காணோம்" என்று கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் பேசியது மிகவும் தவறானது.

இதற்கு எதிர்வினையாக, எதிர்க்கட்சித் தலைவர் "கணவனைத் தேடும் மனைவி" என்று பேசியதும் தவறுதான். "ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்" என்பதை உணர்ந்து இருதரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.