மாற்றம் ஒன்று மட்டுமே மாறாமல் இருக்கிறது. புதிதாக பிறக்கும் ஒவ்வொரு மாதத்திலும் மாற்றங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அந்தவகையில், நாளை (புதன்கிழமை) முதல் ஆதார், பாஸ்போர்ட், வாகனங்களின் விலை மற்றும் கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றங்கள் வர உள்ளன.
இந்திய தனித்துவ அடையாள ஆணைய (யூ.ஐ.டி.ஏ.ஐ.) தளத்தில் ஆதார் எண்ணுடன் இ-மெயில் முகவரியை இணைக்க கட்டணமாக ரூ.75 வசூலிக்கப்பட்டு வந்தது. நாளை முதல் வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை இ-மெயில் முகவரியை கட்டணம் இன்றி இணைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்ல பயன்படுத்தப்படும் பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் நாளை முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல பாஸ்போர்ட்டுக்கான தட்கல் விண்ணப்ப கட்டணம் ரூ.3,500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக கூடியுள்ளது.
வாகனங்களை உற்பத்தி செய்யும் சில நிறுவனங்கள் தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்களின் விலையை 1.5 சதவீதம் முதல் வெவ்வேறு பிரிவுகளில் 3 சதவீதம் வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளன. கிரெடிட் கார்டு விதிமுறைகளிலும் மாற்றங்கள் வரப்போகிறது. பல புதிய வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. சில பரிவர்த்தனைகள் வெகுமதி புள்ளிகளின் (ரிவார்ட்) வகையில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.
சில கிரெடிட் கார்டுதாரர்கள் 3 மாதத்துக்கு மூன்று முறை உள்நாட்டு விமான நிலைய ‘லவுஞ்ச்'களை இலவசமாக பயன்படுத்த வழிவகை வழங்கியுள்ளது. இருப்பினும், இதற்காக அவர்கள் ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரம் செலவிடவேண்டும் என்று கடிவாளம் போட்டுள்ளது. இதுபோல அறிவிக்கப்படாத பல மாற்றங்களும் நிகழ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை, விநியோகம் போன்ற தற்காலிக ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நாளை முதல் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை திரும்பப் பெறுகிறது. பெட்ரோலிய பொருள்கள் விநியோகத்தின் மீதான ஆய்வைத் தொடர்ந்து மக்கள் நலனுக்காக பிறப்பிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஜூன் 12-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நாளை முதல் திரும்பப் பெறப்படுகிறது.