தமிழக செய்திகள்

தி.நகரில் திருமண மண்டப ஊழியர்கள் 2 பேர் படுகொலை

டாஸ்மாக் கடையில் ராஜேந்திரன் மது அருந்தியபோது அவருக்கும் எதிரே மது அருந்திய நபர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

சென்னை தியாகராய நகர் பகுதியில் நேற்று இரவு இரட்டை கொலை நடந்து உள்ளதாக அப்பகுதி மக்கள் மாம்பலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சென்னை பாண்டிபஜார் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே தலையில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

இதனை தொடர்ந்து அதே பகுதியில் சுமார் 20 மீட்டர் தூரத்தில் மற்றொருவர் உருட்டு கட்டையால் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.

இதுகுறித்து மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ரவிகுமார் (வயது 40) என்று தெரிய வந்தது. இவர் தி.நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தியாகராய நகர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

அதே போல் டாஸ்மாக் கடையின் அருகே அடித்து கொலை செய்யப்பட்டவர் சென்னை கண்ணம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (46) என்று தெரியவந்தது. இவரும் அதே திருமண மண்டபத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

நேற்று இரவு தி.நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ராஜேந்திரன் மது அருந்தியபோது அவருக்கும் எதிரே மது அருந்திய நபர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் அந்த கும்பல் ராஜேந்திரனை பின் தலையில் சரமாரியாக தாக்கியதில் சுருண்டு விழுந்தஅவர் சம்பவ இடத்தில் இறந்தார்.

அதே மண்டபத்தில் தொழிலாளியாக பணிபுரியும் ரவிக்குமார் திருமண விருந்து முடிந்தவுடன் சாப்பிடும் அறையை சுத்தம் செய்யும் ஊழியர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக தெரிய வந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சக ஊழியர் மணி என்பவர் உருட்டு கட்டியால் தொழிலாளி ரவிக்குமாரை சரமாரியாக அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் ராஜேந்திரனை கொலை செய்த பாலாஜி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் தலைமையில் 2 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த இரட்டை கொலைக்கு ஏதேனும் சம்பந்தம் ஏதும் உள்ளதா? என்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.