தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறிவிட்டது. ஆனால், சீர்காழி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செந்தில் செல்வன், கடையநல்லூர் தொகுதியில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜேந்திரன் ஆகியோர் இரண்டு எம்.எல்.ஏ.-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனர். இதனால் இருவரும் தி.மு.க. எம்.எல்.ஏ.-வாக தொடர்வார்கள்.
இரண்டு எம்.எல்.ஏ.-க்களும் பதவி ராஜினாமா செய்தால், இடைத்தேர்தல் வரும். அப்போது நானே வந்து இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வேன் எனத் தெரிவித்தேன். செந்தில் செல்வம் பதிலே சொல்லல. அவர் திமுக-வில்தான் இருக்க போகிறேன் என்று போயிட்டாரு. ஆனால், ராஜேந்திரன் நான் மதிமுக-வில்தான் இருக்கிறேன். எம்.எல்.ஏ.-வாக தொடர்வேன் எனச் சொல்லியிருக்காரு.
இவ்வாறு வை.கோ. தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேற முடிவு செய்யப்பட்டது. இதனால் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என வை.கோ. தெரிவித்தார்.
மேலும், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? என்பது குறித்து மதிமுக தலைவர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
கூட்டணி பேச்சுவார்த்தையில் என்னை சந்திக்க ஸ்டாலின் மறுத்துவிட்டார். நேரம் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்றார். பாஜக-வை எதிர்க்கதான் திமுக-வை ஆதரித்தோம். ஆனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க திமுக முயற்சி செய்தது. ஐயூஎம்எல், விசிக ஆதரவு கொடுத்து அமைச்சர்கள் ஆனார்கள். நாங்கள் தவெக-வுக்கு ஆதரவு தரவில்லை. ஆனால் ஏன் எங்களை கேவலமாக பேசுனீர்கள்? நாங்கள் என்ன செய்தோம்?.
இரு நாட்களுக்கு முன் நடந்த திருமணத்தில் ஸ்டாலினைச் சந்தித்தேன். என் அருகே சோபாவில் இடம் இருந்தும் அமராமல் இருந்தார். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவர் சீமானிடம் பேசிக் கொண்டிருந்தார். அதன்பிறகு அவர் என் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.
இவ்வாறு வை.கோ. தெரிவித்தார்.
முன்னதாக, வைகோ தலைமையில் நடந்த ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தை சீர்காழி எம்.எல்.ஏ. புறக்கணித்தார். இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இரண்டு எம்.எல்.ஏ.-க்களும் பங்கேற்கவில்லை.