தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு பிரதிபலனாக 'சோஃபா டெலிவரி' , எம்எல்ஏக்களுக்கு பெட்டிகள் வழங்கப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் கிண்டலாகக் குறிப்பிட்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர், திமுகவுக்கு துரோகம் இழைத்தவர்களை ஒருபோதும் மறக்க மாட்டோம் என காட்டமாக பேசினார்.
பிரசாரத்தின் போது பேசிய உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவியதன் பின்னணியில் மிகப்பெரிய அளவில் குதிரைபேரம் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டினார். மக்கள் அளித்த நம்பிக்கை தீர்ப்பை மதிக்காமல், சுயநல லாபங்களுக்காகவும் நிதி ஆதாயங்களுக்காகவும் மக்கள் பிரதிநிதிகள் கட்சி மாறியதாலேயே தாராபுரம் தொகுதிக்கு இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது என்று சாடினார்.
தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு பிரதிபலனாக 'சோஃபா டெலிவரி' , எம்எல்ஏக்களுக்கு பெட்டிகள் வழங்கப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் கிண்டலாகக் குறிப்பிட்டார். அரசியல் ரீதியாக ஆதரவு அளிக்கும் அமைப்புகளுக்குப் பின்னணியில் நடைபெறும் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் சலுகை பகிர்வுகளை சுட்டிக்காட்டும் வகையில், "ஆதரவு தந்த கட்சிகளுக்கு விஜய் நேரடியாக சென்று சோஃபா டெலிவரி செய்கிறார்" என அடுக்கடுக்கான விமர்சனங்களை வைத்தார்.
திமுகவுக்கு துரோகம் இழைத்தவர்களை ஒருபோதும் மறக்க மாட்டோம். முந்தைய வாக்களிப்பின் புனிதத்தை கெடுக்கும் வகையில் முதுகில் குத்தி குதிரைபேரத்தில் ஈடுபட்டவர்களுக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும், தொகுதி வளர்ச்சிக்கும் நிலையான ஆட்சிக்கும் திமுக வேட்பாளருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் கேட்டுக்கொண்டார்.