தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி அக்.1ல் தமிழ்நாடு முழுவதும் இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

வரைவு வாக்காளர் பட்டியல்களிலிருந்து நாடு முழுவதும் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Gyanesh Kumar
Published on: 
Summary

'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் நடத்திய புலனாய்வு விசாரணையின் அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குள் நடந்துள்ள அத்துமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரி, வரும் அக்டோபர் 1-ஆம் தேதி [வியாழக்கிழமை] தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இடதுசாரி கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகார அத்துமீறல் குற்றச்சாட்டு

'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் நடத்திய புலனாய்வு விசாரணையின் அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குள் நடந்துள்ள அத்துமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேர்தல் ஆணையம் என்பது மூன்று ஆணையர்களும் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை முடிவின் அடிப்படையிலோ இயங்க வேண்டிய அமைப்பாகும். ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் ஆட்சேபனைகளைப் புறக்கணித்து தன்னிச்சையாக செயல்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல்

கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் எழுத்துப்பூர்வமாகத் தலைமைத் தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல்களிலிருந்து நாடு முழுவதும் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய வாக்காளர் பதிவிற்கான படிவம் 6-ல் சட்டவிரோதமான மாற்றங்களைச் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் மென்பொருளை மையப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு இரு ஆணையர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இரு ஆணையர்களும் மத்திய அமைச்சரவை செயலாளரிடம் முறையிட்ட போதிலும், மத்திய அரசு இதைக்கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாக இடதுசாரி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

2023 நியமனச் சட்டத்திற்கு எதிர்ப்பு

தேர்தல் ஆணையர்களின் நியமனக் குழுவிலிருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சரை சேர்த்த 'தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம், 2023' நாட்டின் ஜனநாயக அமைப்பைப் பலவீனப்படுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சட்டத்தை ரத்து செய்து, பழைய முறையையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க அழைப்பு

கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வகையில் செயல்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், இதற்குக் காரணமான மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அக்டோபர் 1 அன்று நடைபெறவுள்ள இந்த நாடு தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகளும், அனைத்துப் பிரிவு மக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com