சென்னையின் நுழைவாயிலில் பிரம்மாண்ட சோஹோ வளாகம்: இயற்கையோடு இயைந்த புதுமையான தொழில்நுட்பச் சோலை!

உள்ளூர் மூலிகைகள் மற்றும் தாவரங்களைக் கொண்ட 5 ஏக்கர் பரப்பளவிலான அடர்ந்த குறுங்காடும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
Zoho Complex
Published on: 
Summary

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இந்த வளாகத்தில் 62,000 மரங்களும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான தாவரங்களும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சோஹோ, தனது 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், சென்னைக்கு அருகே வண்டலூர்-கூடுவாஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள எஸ்டான்சியா ஐடி பூங்கா வளாகத்தில் 64 ஏக்கர் பரப்பளவிலான புதிய தலைமையகத்தை அமைத்துள்ளது. 15,000 பணியாளர்கள் ஒரே நேரத்தில் பணிபுரியும் வசதி கொண்ட இந்த வளாகம், கார்ப்பரேட் வேலை கலாச்சாரத்தை இயற்கை எழிலோடு ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கட்டடக் கலை பாணி

அமெரிக்காவின் புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் ஐரோப்பாவின் வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய கட்டடங்களை ஊக்கமாகக் கொண்டு இந்த Neo-Classical பாணி வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. "பணியாளர்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை வேலை செய்யும் இடத்திலேயே செலவிடுவதால், அவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் இந்தச் சூழலை உருவாக்கியுள்ளோம்" என சோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

5 ஏக்கர் அடர்ந்த காடு

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இந்த வளாகத்தில் 62,000 மரங்களும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான தாவரங்களும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், உள்ளூர் மூலிகைகள் மற்றும் தாவரங்களைக் கொண்ட 5 ஏக்கர் பரப்பளவிலான அடர்ந்த குறுங்காடும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர் மறுசுழற்சி

சோஹோ நிறுவனத்தின் இந்தத் தலைமையகம் சுற்றுச்சூழல் அமைப்பில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. வளாகத்திற்கு தேவையான மொத்த ஆற்றலில் 85 சதவீதம் சூரிய ஒளி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெறப்படுகிறது. அதேபோல, பயன்பாட்டிற்குப் பிறகு வெளியேறும் கழிவுநீரில் 92 சதவீதம் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், வளாகத்திலிருந்த பழமையான குளம் சீரமைக்கப்பட்டு இயற்கை ஏரியாக மாற்றப்பட்டுள்ளது.

அமைதியான நடைபாதை கலாச்சாரம்

வளாகத்திற்குள் காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் அமைதியான சூழலைப் பேணவும் வாகனப் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பணியாளர்கள் நடந்து செல்லவோ அல்லது மிதிவண்டிகளை பயன்படுத்தவோ மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், தெருவோரக் கடைகள் பாணியில் அமைக்கப்பட்ட இடங்களில் பில்டர் காபி, தேநீர் அல்லது இளநீர் பருகியபடி கலந்துரையாடுவதற்கான சிறப்பு நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

வளாகத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் சில மாதங்களில் முழுமையடையும் என்று கூறியுள்ள ஸ்ரீதர் வேம்பு, பணிகள் நிறைவடைந்தவுடன் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் இந்த எழில்மிகு பசுமை வளாகத்தைப் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்கள் வணிக நோக்கங்களை தாண்டி இயற்கை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை எவ்வாறு பேண முடியும் என்பதற்கு இந்த சோஹோ வளாகம் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com