தமிழக செய்திகள்

மேகதாதுவில் ஒருபோதும் அணை கட்ட விடமாட்டோம் - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடகா முதல்வர் சிவக்குமார் தொடர்ந்து கூறி வருகிறார்.

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தஞ்சை மாவட்டம் கல்லணையில் 'மேகதாது அணை தடுப்போம், காவிரி காப்போம்' என்ற பெயரில் விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேகதாது அணை

மேகதாது அணை தடுப்போம், காவிரி காப்போம் என்ற பெயரில் 4 நாள் விழிப்புணர்வு நடைப்பயண பிரசாரத்தை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் காவிரி ஆறு தமிழ்நாட்டிற்குள் நுழையும் பகுதியான பிலிகுண்டுலுவில் தொடங்கினார். தொடர்ந்து அவர் தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சியில் பிரசார நடைப்பயணம் செய்தார்.

அன்புமணி ராமதாஸ் நடைப்பயணம்

இன்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தஞ்சை மாவட்டம் கல்லணையில் விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கல்லணை காவிரி ஆற்றின் நடுவில் இறங்கி பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

கர்நாடகா முதல்வர் சிவக்குமார்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடகா முதல்வர் சிவக்குமார் தொடர்ந்து கூறி வருகிறார். கர்நாடகாவில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் சிவக்குமார் வெற்றி பெற மேகதாது அணை கட்ட தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழக அரசோ, கட்சிகளோ வலுவான எதிர்ப்பு தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது.

கடந்த 70 ஆண்டுகளில் கர்நாடகா அரசு பல அணைகளை கட்டியுள்ளது. தற்போது மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. விவசாயம் முற்றிலும் பொய்த்து விடும். தமிழகம் பாலைவனமாகி விடும். தமிழகத்தில் அரிசி கிலோ ரூ.300-க்கு கூட விற்பனையாகும் அவல நிலை ஏற்படும்.

உடனடியாக மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மேகதாது அணை கட்டினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேச விரிவாக பேச உள்ளேன். இது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் பேச நேரம் கேட்டுள்ளேன். ஒருபோதும் மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து தஞ்சையில் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். தொடர்ந்து அவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அன்புமணி ராமதாஸ் காவிரி ஆற்றில் பூம்புகாரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.