ஊழலை ஒழிக்க முற்படும் எந்தவொரு அரசுக்கும் தனது முழு ஆதரவு உண்டு என்று 'வீ தி லீடர்ஸ்' இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் நடைபெற்ற 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை,
"ஒரு புதிய அரசு பொறுப்பேற்கும்போது, அதன் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கு முன்னதாக குறைந்தபட்சம் ஓராண்டு காலம் அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
ஒரு புதிய நிறுவனத்தில் சேர்ந்தால் கூட, அங்குள்ள நடைமுறைகளைப் புரிந்துகொள்ள 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஆகிறது.
தற்போதைய அமைச்சரவையில் உள்ள பல உறுப்பினர்கள், இதற்கு முன்பு கவுன்சிலராக கூட இருந்ததில்லை.
அவர்கள் முதன்முறையாக அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். எனவே, அவர்கள் அரசு நிர்வாகத்தைக் கற்றுக்கொண்டு, முடிவுகளைத் தர சில காலம் தேவைப்படுகிறது.
எனவே, தேவையற்ற முட்டுக்கட்டைகளை உருவாக்காமல், அரசு செயல்பட போதிய அவகாசம் அளிக்க வேண்டும்.
தவெக அரசு தமிழ்நாட்டிற்கு நல்லது செய்தால், அதனை முதலில் வரவேற்பது நாமாகத்தான் இருப்போம். ஊழலைக் கட்டுப்படுத்தும் எவருக்கும் எங்களின் ஆதரவு எப்போதும் இருக்கும்." என தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தின் தற்போதைய நிதி நெருக்கடிகளை ஒரே இரவில் சரிசெய்துவிட முடியாது என்றும் தொடர்ச்சியான சீர்திருத்த நடவடிக்கைகள் மட்டுமே இதற்கு தீர்வாகும் என்றார்.
முன்னதாக சமீபத்திய நேர்காணலிலும், தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் வழங்க வேண்டும் ஏன் அண்ணாமலை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அண்ணாமலை தொடங்கிய வி தி லீடர்ஸ் இயக்கத்தின் முதல் மாநாடு வரும் 12 ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது.
தமிழக அரசியல் போக்கு குறித்த தனது கருத்து வேறுபாடுகள் காரணமாக பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, இந்த புதிய அரசியல் இயக்கத்தைத் தனியாகத் தொடங்கினார்.
அண்ணாமலை தொடங்கியுள்ள வி த லீடர்ஸ் இயக்கத்தில் தற்போது வரை சுமார் 18 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
இந்த இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை ஒரு கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்களும் நடைபெற்று வருகின்றன.