தமிழக செய்திகள்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிவால் காளிங்கராயன் வாய்க்காலில் நீர் திறப்பு ஒத்திவைப்பு

பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் மழை இன்றி நீர் வரத்து குறைந்து திறக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது .

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் பவானி, காளிங்கராயன் அணைக்கட்டிலிருந்து காளிங்கராயன் வாய்க்காலாக வருகிறது. இந்த வாய்க்கால் பாசனம் மூலம் 15 ஆயிரத்து 763 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்காக ஜூன் 16ஆம் தேதி தண்ணீர் திறந்து ஏப்ரல் 30-ல் நிறுத்தப்படும் இந்த 10 மாத காலத்தில் நெல் வாழை கரும்பு மஞ்சள் உள்ளிட்ட பயிர் சாகுபடி ஆகும்.

காளிங்கராயன் வாய்க்காலில் வெண்டிபாளையம் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியாள் ஜூன் 28ஆம் தேதி தண்ணீர் திறக்க அரசுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்திருந்தனர். இதனால் விவசாயிகளும் பயிர் சாகுபடிக்கு ஆயத்தமாகினர். இந்நிலையில் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் மழை இன்றி நீர் வரத்து குறைந்து திறக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது .

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 54.21 அடியாக உள்ளது. இருப்பு 5.55 டி.எம்.சி.யாக உள்ளது. நீர் வரத்து 57 கனடியாக இருந்தது. இதில் 2 டி.எம்.சி நீர் டெட்ஸ்டோரேஜ் என வைக்க வேண்டும்.

இச்சூழலில் பாசனத்திற்கு நீர் திறந்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் பவானிசாகர் அணைக்கு ஆண்டுதோறும் சராசரியாக ஜூன் மாதம் 1100 கன அடி ஜூலை மாதம் 3000 கனஅடி தண்ணீர் வரத்தாகும். இம்மாதம் 100 கன அடிக்கும் குறைவாக நீர் வரத்து ஆகிறது. இதனால் காளிங்கராயனில் வரும் 28 ஆம் தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்ட நீர் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீர் வரத்துக்கு ஏற்ப தண்ணீர் திறப்பு தேதி அறிவிக்கப்படும் என்றனர்.