தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி த.வெ.க. ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் தனி அணி உருவானது.
சட்டசபையில நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த அணியை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு கொடுத்தது. இதற்கிடையே 4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர்.
நீண்ட இழுபறிக்கு பின்னர் மற்ற 21 எம்.எல்.ஏ.க்களும் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அவர்கள் மீதான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற நடவடிக்கை எடுத்தார்.
இதற்கிடையே அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் விலகி தொடர்ந்து த.வெ.க.வில் இணைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
தலைமை என்பது
அதிகாரமோ, ஆணவமோ அல்ல…
‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’
உழைக்கும் தொண்டர்களின் மனதை
வெல்ல முடியாத தலைமை,
மக்களின் மனதை எப்படி வெல்லும்?
உணர்வுகளை மதிக்காத இடத்தில்
உண்மையான பயணம் சாத்தியமா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.