குதிரை பேரம் புகார்: ஆதாரங்கள் இல்லாமல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியாது - சென்னை ஐகோர்ட்

கட்சி மாறிய 4 பேரையும் குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.
Madras High Court
Published on

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறி இருப்பதாவது:-

கடந்த மே 13-ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய அ.தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.

அது நிலுவையில் இருந்தபோது, மே 25-ந்தேதி த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்த மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்தியபாமா ஆகியோரும், மே 26-ந்தேதி அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் பதவிகளை ராஜினாமா செய்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு தலைமைச் செயலகத்திலேயே த.வெ.க. உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

இடைத்தேர்தலில் 4 பேருக்கும் சீட் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளதாக நம்பப்படுகிறது. அரசியல் லாப நோக்குடன் நான்கு எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வில் இணைந்துள்ளதால், இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடைத்தேர்தலுக்கு 100 கோடி ரூபாய் வரை அரசுக்கு செலவு ஏற்படும் என்பதால், லாப நோக்குடன் ராஜினாமா செய்து விட்டு, கட்சி மாறிய 4 பேரையும் குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், முறைகேடுகள் நடந்துள்ளது எனக் கூற என்ன ஆதாரம் உள்ளது? ஆதாரங்கள் இல்லாமல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்றனர்.

இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வக்கீல், நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த நாளிலேயே, ஆளுங்கட்சியில் இணைந்த விஷயத்தில் பெருந்தொகை சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது. தனிமனிதனாகிய மனுதாரரால் ஆதாரங்களை சேகரிக்க முடியாது என்பதால், சி.பி.ஐ. விசாரணை கேட்பதாகக் குறிப்பிட்டார்.

இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com