பழுதடைந்து காணப்படும் கன்னியாகுமரி – களியக்காவிளை நெடுஞ்சாலை மற்றும் பேயன்குழி சந்திப்பு – வடக்கு நுள்ளிவிளை இணைப்பு சாலைகளை உடனடியாக செப்பனிட்டு விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளருக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலையாக இருந்த கன்னியாகுமரி – களியக்காவிளை சாலை தற்பொழுது மாநில நெடுஞ்சாலையாக மாறிவிட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்ட பொறியாளருக்கு அவர் சமர்ப்பித்த கோரிக்கையில்:
கடந்த 4 ஆண்டுகளில் நெடுஞ்சாலையை செப்பனிட 2022 ஆம் ஆண்டு மத்திய அரசிடமிருந்து 14.99 கோடி ரூபாய் பெற்று தந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 2024 ஆம் ஆண்டு மீண்டும் சாலையை செப்பனிட நிதி கோரிய பொழுது 4 வழிச்சாலை பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால் இந்த சாலை மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டு மாநில நெடுஞ்சாலையாக மாறும் என மத்திய அரசு கூறி நிதி ஒதுக்க மறுத்த பொழுதும், போராடி 2024 ஆம் ஆண்டு ரூபாய் 14.87 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த பணிகள் மாநில அரசு வாயிலாக, மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடைபெற்றது. மொத்தம் பழுதடைந்த 12 கிலோமீட்டர் தூரம் ஒப்பந்தகாரர் மூலம் செப்பனிடப்பட்டது.
தற்பொழுது இந்த சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. ஆதலால் இந்த பகுதிகளில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பழுதுகள் குறைபாடு பொறுப்பு காலத்திற்குள் (Defect Liability period ) வருவதால் அந்த ஒப்பந்தகாரர் வாயிலாக பழுதுகளை செப்பனிட ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மீதமுள்ள பகுதிகளில் நெடுஞ்சாலை துறை வாயிலாக பழுதுகளை செப்பனிட மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என கோரியுள்ளார்.
அதுபோன்று நுள்ளிவிளையில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால் தோட்டியோடு – திங்கள் நகர் பிரதான சாலை துண்டிக்கப்பட்டு, நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் பேயன்குழி சந்திப்பிலிருந்து இரட்டை கரை சானல் வழியாக சென்று வடக்கு நுள்ளிவிளையில் புதிய 4 வழி சாலையை சந்திக்கிறது. அதுபோன்று நாகர்கோவிலில் இருந்து செல்லும் வாகனங்கள் சானலின் மறுபுறமாக உள்ள சாலையில் செல்கின்றன. ஆனால் இந்த சாலை மிகவும் பழுதடைந்து, வாகனங்கள் ஆபத்தான நிலையில் பயணிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுகோளை ஏற்று அந்த சாலையில் தற்காலிகமாக குழிகள் நிரப்பப்பட்ட போதிலும், அதிகமான வாகனங்கள் அது வழியாக செல்லும் காரணத்தால் மீண்டும் சாலை பழுதடைந்துள்ளது. மழை காலங்களில் மண் சரிவு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் என்பதையும் சுட்டிக்காட்டி, நுள்ளிவிளை மேம்பால பணிகள் முடிந்து அந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து கொடுக்கும் வரை மக்கள் இந்த சாலையை தான் பயன்படுத்துவார்கள் என்பதையும் குறிப்பிட்டுளார்.
ஆதலால் பேயன்குழி – வடக்கு நுள்ளிவிளை சாலையை முழுமையாக செப்பனிட்டு, நிரந்தரமாக தார்/ கான்க்ரீட் சாலை அமைக்க ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.