தமிழக செய்திகள்

த.வெ.க. வேட்பாளர்களுடன் விஜய் நாளை ஆலோசனை

வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வாறு செயல்பட வேண்டும்? எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும்? என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து விஜய் வேட்பாளர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குகிறார்.

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி முடிவடைந்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி முதல் முறையாக தேர்தலை சந்தித்தார். இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் போட்டியிட்டது. கட்சி தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளரை விஜய் ஆதரித்தார்.

வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு விஜய், த.வெ.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் போது வாக்குப்பதிவு மற்றும் கள நிலவரம் எப்படி உள்ளது என்று கேட்டறிந்தார். வாக்கு எண்ணிக்கையின் போது என்னென்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில் விஜய், நாளை பிற்பகல் 3 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் த.வெ.க. வேட்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் பங்கேற்கிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை விஜய் வழங்க உள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வாறு செயல்பட வேண்டும்? எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும்? என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து விஜய் வேட்பாளர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குகிறார்.

ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதல் முடிவு நிலவரம் அறிவிக்கும் வரை அந்த இடத்திலேயே இருக்க வேண்டும், வேறு எங்கும் சென்று விடக்கூடாது. ஓட்டு எண்ணிக்கையின் போது ஏதாவது சந்தேகம் இருந்தால் உடனே அதை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று அதை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளையும் வேட்பாளர்களுக்கு விஜய் வழங்குகிறார்.