பெயரிலேயே வெற்றி இருந்தாலும் விஜய் பெற்ற வெற்றியும் அடைந்த உச்சமும் யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. அது சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி. விஜய் பெரிதாக கண்டுகொள்ளப்பட்டதாக ஒருவராக விமர்சனங்களால் விலக்கி ஒதுக்கப்பட்டவராகவே தனது பயணத்தை தொடங்கினார். ஆனால் காலமும் பொறுமையும் உழைப்பும் அவரை செதுக்கி செப்பனிட்டது.
சினிமா அத்தியாயம்
படிப்பில் சுமார் என சொல்லப்பட்ட லயோலா கல்லூரி முதலாமாண்டு விஸ்யூல் கம்யூனிகேஷன் மாணவன் நடித்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்பதை தாண்டி கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானது. விமர்சகர்கள், விஷயம் தெரிந்தவர்கள் என தத்தமது அலுத்துக்கொள்ளும் கருத்துக்களையும், ஏளன சிரிப்பையுமே அந்த படத்திற்கும் அதன் நாயகனுக்கும் தந்தனர்.
ஒடிசலான உடலில் ஒரு கருப்பு வார் பனியன், ஊதினால் பறந்துவிடும் உடல்வாகு, போதாதற்கு தமிழ்ச் சினிமா அறவே வெறுக்கும் கருப்பு நிறம் (ரஜினி, விஜயகாந்த் விதிவிலக்கு). ஒரு இயக்குநரின் மகன் என்பதாலேயே நடிக்க வந்துவிடுவதா, அதுவும் ஹீரோவாக, எல்லாம் கால்க்கொடுமை என்றது அன்றைய சினிமா சமூகம். ஆனால் அது வெறும் அன்றைய தீர்ப்பு தான். நாளைய தீர்ப்பை எழுதும் ஒரு தகத்தகாய ஆளுமை அந்த சுட்டெரிக்கும் விமர்சனங்களில் இருந்து பீனிக்ஸ் ஆக பிறக்கப்போகின்றார் என்பதை அறிந்து வைத்திருந்தவர் சிலரே. அதில் முதன்மையானவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
ஒரு தந்தையாக மகனை நாயகனாக நிறுவும் கடமையை உணர்ந்த அவர் ஒரு இயக்குநராக போட்ட கணக்கு அவருக்கு கை கொடுத்தது. அந்த கணக்கு தான் விஜயகாந்த். 1993 இல் சந்திரசேகர் இயக்கி வெளியான செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவருக்கு தம்பியாக, படத்தின் 2ஆம் நாயகனாக நடித்தது விஜய். செந்தூரபாண்டி விஜயகாந்த் நடித்த வெற்றிப் படங்களில் ஒன்று. ஆனால் விஜய்க்கு அது முதல் வெற்றி.
அடுத்த 33 ஆண்டுகளுக்கு விஜய்யை தமிழநாட்டின் செல்லப்பிள்ளையாக மாற்றிய வெற்றி அது. தன் மீதான விமர்சனங்களை ஒவ்வொன்றாக உடைக்க விஜய்க்கு பிள்ளையார்சுழி போட்டத் தந்த படம் அது. தொடர்ந்து 1994இல் முதன்மை நாயகனாக இளைய தளபதியாக தந்தை இயக்கிய 'ரசிகன்' படம் மூலம் தனது இன்னிங்க்ஸை தொடங்கினார் விஜய். கல்லூரி படிப்பை தொடர முடியாமல் போனாலும் சினிமா எனும் பல்கலைக்கழகம் அவருக்கு கற்றுத் தந்தது ஏராளம்.
ஆண்டுக்கு குறைந்தது 3 படங்கள் விஜய் நடிப்பில் வெளிவந்தன. ராஜ பார்வை, கோயம்பத்தூர் மாப்பிள்ளை என அடுத்தடுத்த படங்கள் விஜய் முகத்தை தமிழக மக்களுக்கு பரிட்சயமான ஒன்றாக மாற்றியிருந்தாலும் 1996 இல் வெளியான பூவே உனக்காக படம் அவரை மக்கள் மனதில் இடம்பெறச் செய்த முக்கிய மைல்கல். ஒரு தலையாக காதலித்த பெண்ணின் காதலுக்காக விஜய் மேற்கொள்ளும் முயற்சிகள், சினிமாவின் இருபெரும் ஆளுமைகளான நம்பியார் நாகேஷ் காம்போ அந்த படத்தை சென்டிமென்ட்டலாக கொண்டு சேர்ந்தது. காதலர் துளிர்க்கும் இளம் தலைமுறையிடையே விஜயை அவர்களில் ஒருவனமாக நிறுவிய படமும் இதுவே.
தமிழ் சினிமாவின் அப்போதைய வெவ்வேறு இயக்குனர்கள் கைகளில் விஜய் என்ற பிம்பம் மெல்ல உருப்பெற்று உறுதியான மற்றும் தவிர்க்கமுடியாத ஒருவராக மாற்றியது. 2002 இல் பகவதி மூலம் ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்து பெற்று தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களை வழங்கினார் விஜய்.
ஆனால் இடையில் குருவி உள்ளிட்ட சில படங்கள் தோல்வி அடையவே மீண்டும் முளைத்தது விமர்சன முற்கள். அவ்வளவுதான், சினிமாவில் ஒரு கட்டம் வரை தான் புகழும் செல்வாக்கும் என்று பேசத் தொடங்கினர். ஆனால் தோல்வியில் இருந்து மீண்ட விஜய் 2012 இல் 'துப்பாக்கி' மூலம் மற்றோரு பரிமாணத்தை எட்டினார். அது அவரை தமழ் சினிமாவின் முன்னணி நாயகனாக நிறுவியது.
ரஜினி கமலுக்கு பின் அஜித் - விஜய் என்ற டிரண்ட் உருவானது. அதன்பின்னும் புலி, பைரவா ஆகிய சில படங்கள் சறுக்கலை தந்தாலும் தெறி, மெர்சல், லியோ, கோட் என ஓஜியாகவே விஜய் வளம் வந்தார். கேராரியரின் உச்சம்.. அடுத்து என்ன? என்று சிந்தித்த விஜய் அரசியல் பக்கம் திருப்பினார். இது இன்று நேற்று முளைத்த ஆர்வம் அல்ல.
அரசியல் அத்தியாயம்
16 ஆண்டுகளுக்கு முன்பாக அளித்த பேட்டி ஒன்றில், "ஒரு கட்டத்தைத் தாண்டி உதவி செய்ய கையில் அதிகாரம் இருக்க வேண்டும். ஒரு கட்டம் வரைதான் ரசிகர் மன்றமாக, இயக்கமாக இருக்க முடியும். அதைத் தாண்டிவந்துவிட்டால் அதிகாரம் தேவைப்படுகிறது" என்றார் விஜய். அவர் காங்கிரசில் சேரப்போவதாகவும் செய்திகள் அடிபட்டன.
இலங்கை தமிழர் பிரச்னையை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் 2008ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் விஜய் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். மக்கள் பணிகளுக்காக 2009ஆம் ஆண்டு ஜூலையில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு துவங்கப்பட்டது. 2012ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பிலும் 12-ஆம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கு விஜய் விருதுகளை வழங்கினார்.
2017ஆம் ஆண்டு அனிதா என்ற மாணவி மரணம் நிகழ்ந்த போது அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் விஜய். 2018ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், கேரளாவில் வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு விஜய் நிதியுதவி அளித்தார்.
இடையில் 2013 இல் வெளியான தலைவா படத்தில் டைம் டு லீட் என்ற வாசகத்தால் அப்போதைய அரசால் விஜய்க்கு நெருக்கடி ஏற்பட்டது. அந்த படத்தின் ரிலீசுக்காக விஜய் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் வைத்து படத்தை ரிலீஸ் செய்ய செய்தார். தலைவா படம் விஜய்யை மக்களுக்கான தலைவராக நிறுவ முயற்சித்தும் அரசியல் ரீதியாக எதிர்ப்புக்கு உள்ளானது.
நடிகருக்கு அரசியல் ஆசை கூடாது. நீ ஒன்றும் எம்ஜிஆர் கிடையாது என பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்தன. வந்துகொண்டிருக்கின்றன. விமர்சனம் என்பதை தாண்டி அவரால் அவ்வாறு அரசியலில் ஒரு புல்லை கூட பறிக்கமுடியாது என்ற ஏளனமே மேலோங்கியிருந்தது. ஆனால் விஜய் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை நாளைய தீர்ப்பின் போது சினிமா வட்டாரங்கள் உணர தவறியதுபோலவே அரசியல் வட்டாரம் அறிய தவறியது.
ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாகவும், ரசிகர்களை தொண்டர்களாகவும் மாற்றி விஜய் செய்த சோஷியல் இன்ஜினீயரிங் திரை மறைவில் ஒன்றும் செய்யப்பட்டது அல்ல. மாறாக பொது வெளியில் அளவுக்கு அதிகமாக ஊடக வெளிச்சத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒன்று. இருப்பினும் அவரை பெரிதாக எடுத்துக்கொள்ள பலர் தயாராக இல்லை.
இருப்பினும் தன் வழியில் தனக்கே உரிய தன்னம்பிக்கையுடன் விஜய் நடைபோட்டார். 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். அக்கட்சி ஒரு நடிகனின் கட்சியாக மட்டுமே பார்க்கப்பட்டது. கூத்தாடி கோட்டையை பிடிக்க முடியுமா, இவர் என்ன எம்ஜிஆரா என்றே பலர் எண்ணமிட்டனர்.
ஆனால் 2024 அக்டோபரில் விக்ரவாண்டியில் நடந்த தவெக முதல் மாநாட்டிற்கு கூடிய கூட்டம் பலரையும் மலைக்க வைத்தது. ஆனால் கூட்டம் ஓட்டாக மாறாது என்ற சப்பை கட்டுகளையே பலர் மீண்டும் மீண்டும் சொல்லி வந்தனர். ஆனால் விஜய் தன்னை தமிழ்நாட்டை காக்க வந்த ஆபத்பந்தவனாகவும், அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த மாற்றமாகவும் முன்னிறுத்தினார்.
அரசியல் குறித்து அ, ஆ, இ, ஈ தெரியாத இளைஞர்களையும் ஈர்த்தார். அது சினிமா கவர்ச்சி என்ற விமர்சனம் இருக்கலாம். ஆனால் தேர்தல் அரசியலில் அந்த வாதம் அபத்தமானது என்று பலரும் உணரும் காலமும் வந்தது. மற்ற கட்சிகளை போலன்றி இளைஞர்களை கவரும் சமூக ஊடங்களை தவெக விர்சுவல் வாரியர்ஸ் ஆக்கிரமித்தனர்.
நகரங்களில் விஜய்க்கு ஆதரவு அலை இருந்ததில் ஆச்சர்யமில்லை. ஆனால் பல்வேறு இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் குறுநகரங்களிலும் விஜய்யின் அரசியல் வருகை அதிர்வலைகளை ஏற்படுத்தவே செய்தது. கரூர் சம்பவத்தால் தொய்வு ஏற்பட்டபோதும் விமர்சங்களை புறந்தள்ளி விஜய் மீண்டும் அரசியல் பணிகளை முடிகிவிட்டார். 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு தீவிரமாக செயல்பட்டார். திமுக அரசு மீதான காட்டமாக விமர்சனங்கள் மூலம் மக்கள் மத்தியில் தன்னை மீண்டும் ஒரு கழகக் குரலாக எதிரொலிக்கச் செய்தார்.
தேர்தல் சமயத்தில் மண்டலம் வாரியாக சில இடங்களில் மட்டுமே விஜய் பிரசாரம் செய்தார். அவருக்காக பெருங்கூட்டம் கூடியபோதும் அவை வாக்காக மாறாது என்ற காரணத்தையே மீண்டும் மீண்டும் முன்வைத்து உதாசீனப்படுத்தினர். அவர் மூன்றாம் இடம் பிடிக்கலாம், வாக்குகளை பிரிக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் ஆரூடம் கூறினர். வெற்றி என்பதெல்லாம் தொட்டுப் பார்க்கும் இடத்தில் இல்லை என கள நிலவரம் கூறினர். தேர்தலும் வந்தது. முடிவுகளும் மே 4 அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே தவெக முன்னிலை பெற்றது. அந்த முன்னிலை மாலை வரை மாறாமல் நீடித்தது.
தமிழ்நாடு கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத ஒன்று நிகழ்ந்தது. திமுக, அதிமுக கட்சிகளை பின்னுக்கு தள்ளி தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. கூட்டம் வாக்குகளாக மாறும் என்பது நிரூபனமானது. 1992 இல் சினிமாக்காரர்களின் அன்றைய தீர்ப்பு எப்படி பொய்த்ததோ, அரசியல்வாதிகளின் நேற்றைய தீர்ப்பும் பொய்த்தது. விஜய் வெற்றி கொண்டார். ஆனால் விஷயம் அதோடு முடியவில்லை.
ஆட்சி அமைக்க பெரும்பான்மை இன்றி தவித்தது தவெக. பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தனது அதிகாரத்தின் மூலம் ஆட்சி அமைக்க அழைத்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இது மத்திய அரசின் முட்டுக்கட்டை என்ற விமர்சனம் எழுந்தது. 118 என்ற பெரும்பான்மைக்கு தவெக பெருமுயற்சி எடுத்தது. 3 முறை விஜய் ஆளுநரை சென்று சந்தித்தும் பயனில்லை. 5 இடங்கள் கொண்ட காங்கிரஸ் கூட்டணிக்கு வந்திருந்தாலும் மீதமுள்ள இடங்களுக்கு இழுபறி நீடித்தது.
வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் விஜய்க்கு முன் நின்ற மற்றொரு மாபெரும் சவாலாக இது அமைந்தது. இது விஜய் ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்று தரப்பட்ட நெருக்கடியாகவே பார்க்கப்பட்டது. இறுதியாக 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு வழங்கின. ஆனாலும் பெரும்பான்மை வரவில்லை.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதை ஆனது. நீண்ட இழுபறிக்கு பின் விசிகவும் ஐயுஎம்எல் உம் ஆதரவு வழங்கின. 4வது முறையாக நேற்று ஆதரவு கட்சித் தலைவர்களுடன் சென்று ஆளுனரை சந்தித்த விஜய்க்கு கிரீன் சிக்னல் கிடைத்தது.
இறுதியாக பெரும் பரபரப்பு ஓய்ந்து இன்று முதல்வர் பதவியேற்றார் விஜய். இதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் புது சகாப்தம் பிறந்தது. சினிமாவாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி விஜய் முடியாது என்ற வார்த்தையே விஜய் அகராதியில் கிடையாது.