அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எதிர்பாராத ராஜினாமாவால் தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ள இத்தேர்தலில் ஐந்துமுனை போட்டி நிலவுகிறது.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக இத்தேர்தல் ஆளும் தவெகவிற்கு முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. காரணம் இத்தேர்தலில் தவெக வெற்றிப்பெற்றால் கூட்டணி கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சியைத் தொடரலாம்.
இதனைக்கருத்தில் கொண்டு தீவிர பிரசாரத்தில் தவெக ஈடுபட்டு வருகிறது. இதனால் முதலமைச்சர் விஜயும் பிரசாரத்தில் பங்குபெற்று வருகிறார்.
கடந்த வாரம் மதுராந்தகம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், இன்று தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்.,
திமுக போன்ற மன்னராட்சி மனப்பான்மை தவெகவிற்கு கிடையாது. அண்ணாவின் கொள்கைகளை நாம் பின்பற்றுகிறோம். ஆனால் அவர் ஆரம்பித்த கட்சி, திமுகவோடு மறைமுகமாக கூட்டணி வைத்துக்கொண்டு சுயநலமாக சுற்றிக்கொண்டிருக்கிறது.
மக்களின் நம்பிக்கையை தவெக காப்பாற்றும். யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. அதனை முன்னரே கூறியிருக்கிறோம். அதனால் மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணி என கூட்டணிக்கு பெயர் வைத்துள்ளோம்.
அண்ணா, எம்.ஜி.ஆர். காலத்தில் மட்டுமல்ல, நம் காலத்திலும் சாதாரண மக்கள்தான் தேர்தலில் நிற்க வைக்கப்படுகின்றனர். சாதாரண மக்களை நிற்க வைத்துதான் திமுக மன்னர்களை தோற்க வைத்துள்ளோம்.
மு.க.ஸ்டாலின் கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இனி அனைத்து மக்களுக்கும் நன்றிக்கூறிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். இப்போது அவர் ஒருமையில் பேசுகிறார். யாரை விட்டு வேண்டுமானாலும் பேசுங்கள். ஆபாச நிதியை வளர்த்து வைத்துள்ளீர்கள்.
திமுக தரம் தாழ்ந்து பேச பேச, மக்கள் தவெகவை உயரத்திற்கு கொண்டு செல்வார்கள். மக்கள் தீர்ப்பிற்கு தலை வணங்குகிறோம் என இடைத்தேர்தலுக்கு பின்னர் அறிக்கை விடுவார்கள். என தெரிவித்தார்.
தொடர்ந்து அதிமுக எனக்கூறுவதற்கு பதிலாக மாற்றி தவெக எனக்கூறி,
“தவெக (அதிமுக) இப்போது ஒரு கிளை ஒன்றை தொடங்கியுள்ளனர். அது முதலில் பாஜகவின் ஒரு கிளையாக இருந்தது. இப்போது திமுக கிளையாக மாறிவிட்டது. திமுக செய்வதை, அதிமுக செய்கிறது.
திமுகவும், அதிமுகவும் ஒன்றுதான். இவர்கள் இருவருக்கும் ஒரே முதலாளிதான். எம்ஜிஆர் திமுகவை எதிர்த்து கட்சித் தொடங்கினார். ஆனால் அந்தக் கட்சி இன்று திமுகவோடு கூட்டணி வைக்க முயன்றது. அதனால்தான் சத்தியபாமா தவெகவில் இணைந்தார்.
தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுதான் தவெக வந்தார். உடனே பேரம் என்கிறார்கள். மக்கள் அவதூறு பரப்புவதில்லை. திமுகவும், பிற கட்சிகளும்தான் அவதூறு பரப்புகின்றன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல திமுகவை தில்லாக எதிர்க்கும் ஒரே ஆள் இந்த விஜய் மட்டும்தான்.
எந்த எல்லைக்கும் சென்று மக்களுக்கு நல்லது செய்வேன், நல்லது மட்டும்தான் செய்வேன். கொங்கு பகுதி மக்கள் உழைக்கும் மக்கள். சத்தியம் பக்கம்தான் நிற்பீர்கள், அதனால் சத்தியபாமாவிற்கு விசில் சின்னத்தில் வாக்களியுங்கள்.” என தெரிவித்தார்.