ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி வழக்கில், விரிவான விசாரணை நடத்தி, அதில் சம்பந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது;
இந்த வழக்கு தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை மூடிமறைக்க அதிகாரிகளும், ஆட்சியாளர்களும், குறிப்பாக காவல்துறையினரும் முயற்சி செய்கின்றனர் என்ற விவரங்களும் வந்துக் கொண்டிருக்கிறது.
பலர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் தகவல் வந்துக்கொண்டே வருகிறது. இந்த வழக்கு தற்போது வெளியவர போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா சண்முக சுந்தரம்தான் காரணம். அவரின் உத்தரவின்பேரில்தான் இந்த விஷயம் வெளிவந்துள்ளது.
இந்த உத்தரவால்தான் இப்போதைய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளது. தவெகவைச் சார்ந்தவர்கள் அல்லது தமிழ்நாடு அரசு ஏதோ தாமாகவே முன்வந்து இந்த வழக்கை நேர்மையான முறையில் நடத்துவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி போக்சோ நீதிமன்றத்தில், தற்போது இருக்கும் தமிழ்நாடு அரசு இந்த வழக்கை முடித்துக் கொள்ளும் வகையில்தான், காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதனால் தங்களால்தான் இந்த வழக்கு இந்தளவு தீவிரமடைந்துள்ளது என்று சொல்வதற்கு அவர்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.
அதிமுக, திமுக, தவெக என மூன்று ஆட்சிகளிலும் இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.” என தெரிவித்தார்.